அகழியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகள்

தஞ்சையில் அகழியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது. மேலும் அகழியில் சாக்கடை நீர் தேங்குவதுடன், குப்பைகளும் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது.

Update: 2023-07-11 20:13 GMT

தஞ்சையில் அகழியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது. மேலும் அகழியில் சாக்கடை நீர் தேங்குவதுடன், குப்பைகளும் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது.

கோட்டையை சுற்றிலும் அகழி

பண்டைய காலத்தில் மன்னர்கள் தங்கள் நாட்டு மக்களை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்கு கோட்டைகளை கட்டினர். அந்த கோட்டைக்குள் எதிரிகள் வராமல் இருப்பதற்காக கோட்டையை சுற்றிலும் அகழிகள் அமைத்தனர். இதில் முதலைகள், பாம்புகள் போன்ற கொடிய விலங்குகள் விடப்பட்டிருக்கும். இதை தாண்டி கோட்டைக்குள் செல்வது என்பது மிகவும் அரிது ஆகும்.

அந்த வகையில் தஞ்சை பெரிய கோவிலை சுற்றிலும் சின்ன கோட்டைச்சுவர் மற்றும் பெரிய கோட்டைச்சுவர், அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பெரிய கோட்டைச்சுவரை சுற்றிலும் அகழிகள் காணப்படுகிறது. இந்த அகழி தஞ்சை பெரிய கோவிலின் பின்பகுதியில் இருந்து தொடங்கி மேல அலங்கம், வடக்கு அலங்கம், கீழ அலங்கம் வரை செல்கிறது.

நிலத்தடி நீர் மட்டம் உயரும்

இந்த அகழியின் அருகே புது ஆறு எனப்படும் கல்லணைக்கால்வாய் செல்கிறது. கல்லணையில் இருந்து இந்த ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும் போது, அகழி பகுதிக்கும் தண்ணீர் இந்த ஆற்றில் இருந்து திறக்கப்படும். இதற்காக பெரியகோவில் பின்பகுதியில் மதகும் உள்ளது. அவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீர் அகழியில் நிரம்பி இருக்கும் போது அந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மேலும், பொதுமக்கள் கால்நடைகளை குளிப் பாட்டுவதற்கும் இந்த அகழிநீரை பயன்படுத்தி வந்தனர்.

தற்போது இந்த அகழியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடந்து வருகிறது. அகழியில் நடைபாதை அமைக்கப்பட்டு படகு விடும் வகையில் பணிகள் தொடங்கப்பட்டன. நாளடைவில் இந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக அகழியில் பெயரளவுக்கே தண்ணீர் நிரப்பபடுகிறது. அவ்வாறு விடப்படும் தண்ணீரும் சில நாட்களிலேயே வற்றி விரும். தற்போது கல்லணைக்கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு ஒரு மாதத்தை எட்டும் நிலையிலும் இன்னும் அகழி பகுதிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமிப்பு

இந்த நிலையில் ஆகாயத்தாமரைகள் அதிகளவில் வளர்ந்து அகழி முழுவதும் ஆக்கிரமித்து புதர்மண்டி காட்சி அளிக்கிறது. மேலும், சீக்கிரமாகவே அகழி நீரின்றி வறண்டுவிடுகிறது. இதனை பயன்படுத்தி அகழியை குப்பை கொட்டும் இடமாகவும் சிலர் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அகழி கரையோரங்களில் செடி, கொடிகள் வளர்ந்து விஷப்பூச்சிகளின் கூடாரமாகவும் திகழ்கிறது.

அதுமட்டுமின்றி ஆகாயத்தாமரைகள், குப்பைகள் குவிந்து கிடப்பதால் அகழி பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அந்த பகுதியை மூக்கை மூடியபடி கடந்து சென்று வருகின்றனர். இதனால் சுகாதார சீர்க்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகழியில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி, உடனடியாக நீர் நீரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்