குப்பைகளை சுத்தம் செய்ய தனியார் நிறுவனத்துக்கு அனுமதி
ஆண்டுக்கு ரூ.170 கோடியில் குப்பைக ளை சுத்தம் செய்ய தனியார் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கும் தீர்மானத்துக்கு கோவை மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.;
கோவை
ஆண்டுக்கு ரூ.170 கோடியில் குப்பைக ளை சுத்தம் செய்ய தனியார் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கும் தீர்மானத்துக்கு கோவை மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மாநகராட்சி கூட்டம்
கோவை மாநகராட்சி கவுன்சிலர்களின் கூட்டம் பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நடந்தது. இதற்கு மேயர் கல்பனா தலைமை தாங்கினார். துணை மேயர் வெற்றிச் செல்வன், ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை குறித்து பேசினார்கள். அதன் விவரம் வருமாறு:-
பிரபாகரன் (அ.தி.மு.க.) :- குப்பை அள்ளும் ஒப்பந்தத்தை கவுன்சிலர்களுக்கு தெரிவிக்காமல் ஒப்புதலுக்கு வைப்பதற்கான காரணத்தை மேயர் விளக்க வேண்டும் என்றார். அப்போது மேயருக்கும், கவுன்சிலர் பிரபாகரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் :- கிழக்கு மண்டலத்தில் பாதாள சாக்கடை பணிகளை விரைவில் செய்து முடிக்க வேண்டும். சிங்காநல்லூர் குளத்துக்கு கழிவுநீர் வருவதை தடுக்க அனைத்து கால்வாய்களிலும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.
மாதந்தோறும் குழு கூட்டம்
மத்திய மண்டல தலைவர் மீனாலோகு :- தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும். ரத்தினபுரி மாநகராட்சி பள்ளியில் கலையரங்கம் கட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. அதற்கு மேயர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
சுகாதாரக்குழு தலைவர் மாரிச்செல்வன் :- மாநகராட்சியில் உள்ள குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் கூட்டத்தை மாதந்தோறும் நடத்த வேண்டும்.
கார்த்திக் செல்வராஜ்(தி.மு.க.):- கவுன்சிலர்களுக்கு மதிப்பூதியம் அறிவித்த தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி. எனது மதிப்பூதியத்தை முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குகிறேன்.
சித்ரா வெள்ளியங்கிரி (ம.தி.மு.க.):- வழிபாட்டு தலங்களுக்கு பாகுபாடு இல்லாமல் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். மன்றத்தில் கவுன்சிலர்களின் கேள்விக்கு அதிகாரிகள் அளிக்கும் பதில் தொடர்பான வீடியோ மற்றும் ஆடியோக்களை வழங்க வேண்டும்.
முதல்-அமைச்சருக்கு நன்றி
கூட்டத்தில், மேயர், துணை மேயர், கவுன்சிலர்களுக்கு மதிப் பூதியம் அறிவித்து உள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.