நீலகிரியில் வனப்பகுதியையொட்டிய இடங்களில் புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடு

புத்தாண்டையொட்டி அதிக சத்தத்துடன் கூடிய பட்டாசுகள் வெடிப்பது, வாண வேடிக்கை நடத்துவது உள்ளிட்டவற்றுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.;

Update:2025-12-28 09:59 IST

நீலகிரி,

நீலகிரி மாவட்டத்திற்கு புத்தாண்டு விடுமுறையின்போது ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். புத்தாண்டை கொண்டாட வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வனங்களுக்கு செல்கின்றனர். அங்கு தீ மூட்டுவது, மது அருந்திவிட்டு ஆடி, பாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தவிர்க்க வனத்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

எனினும் சில சுற்றுலா பயணிகள் அத்துமீறி செயல்படுவதால் வனத்திற்கும், வனவிலங்குகளுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சிங்காரா, மாயாறு, மசினகுடி, சிறியூர் மற்றும் பொக்காபுரத்தில் வனப்பகுதியையொட்டி தங்கும் விடுதிகள் உள்ளன.

இங்கு புத்தாண்டை முன்னிட்டு வரும் சுற்றுலா பயணிகளுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம். எனவே, இங்குள்ள பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி அதிக சத்தத்துடன் கூடிய பட்டாசுகள் வெடிப்பது, வாண வேடிக்கை நடத்துவது உள்ளிட்டவற்றுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர்  கூறியதாவது:-

சிங்காரா, மாயாறு, மசினகுடி, சிறியூர், பொக்காபுரம், வாழைத்தோட்டம் போன்ற வனப்பகுதியையொட்டி உள்ள தங்கும் விடுதிகளில் தங்கும் சுற்றுலா பயணிகள் புத்தாண்டு தினத்தன்று பட்டாசுகள் வெடிக்கக்கூடாது அதேபோல் அதிக சத்தத்துடன் எந்த ஒரு நிகழ்ச்சிகளையும் நடத்த கூடாது.

வனத்திற்குள் வாகனங்களை கொண்டு சென்று வனவிலங்குகளை துன்புறுத்தும் வகையில் ஓட்டக்கூடாது. வனவிலங்குகளுக்கு உணவு கொடுக்க கூடாது. புகைப்பிடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகள் தீ மூட்டினால் எளிதில் வனங்களுக்கு பரவும் அபாயம் நீடிக்கிறது.

எனவே, அதனை தவிர்க்க வேண்டும். மேலும் வனங்களை ஒட்டிய சாலைகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டும். இதனை கண்காணிக்க வன ஊழியர்கள் ரோந்து பணிகளை மேற்கொள்வார்கள். இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்