6-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் - ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு
ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த ஆயத்த மாநாடு மதுரையில் நடந்தது.;
சென்னை,
தமிழக முதல்-அமைச்சரின் தேர்தல் கால வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றுவோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 6-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
இந்தநிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் முழுமையாக பங்கேற்கும் வகையில் ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த ஆயத்த மாநாடு மதுரை பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.
இந்த மாநாட்டிற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரபோஸ், பாண்டி, நவநீதகிருஷ்ணன், பொற்செல்வன், பீட்டர் ஆரோக்யராஜ், தமிழ் உள்ளிட்டோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் நீதிராஜா தொடக்கவுரை நிகழ்த்தினார்.
முன்னதாக, ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினர் செந்தாமரை கண்ணன், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மண்டல பொறுப்பாளர் கிறிஸ்டல் ஜீவா, மாநில ஒருங்கிணைப்பாளர் மயில் உள்ளிட்டவர்கள் பேசினர். மாநாட்டில், ஜனவரி மாதம் நடைபெறும், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்கள் அனைவரும் கருப்பு அட்டை அணிந்து முழுமையாக பங்கேற்க வேண்டும் என மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.