வைகை ஆற்றில் புதைந்து கிடந்த அம்மன் சிலை, குத்துவிளக்கு மீட்பு
வைகை ஆற்றில் புதைந்து கிடந்த அம்மன் சிலை, குத்துவிளக்கு மீட்கப்பட்டது.
திருப்புவனம்,
திருப்புவனம் வைகை ஆற்றில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு பல வருடங்கள் ஆகின்றது. இந்த பாலத்தின் கீழே உள்ள தூண்கள் பகுதி அருகே இரவு நேரங்களில் அனுமதி இல்லாமல் ஆற்று மணல் அள்ளப்பட்டது. இதனால் தற்போது பாலத்தின் தூண்களின் கீழே இடைவெளியும், பில்லர் அரித்தும் காணப்பட்டது. மேலே வாகனங்கள் செல்லும்போது பாலம் அதிர்வும் ஏற்பட்டது. இந்த நிலையில் பாலத்துக்கு கீழே தூண்கள் அரித்த பகுதியில் மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது.
நேற்று மராமத்து பணிக்காக தூண்களின் பக்கவாட்டில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் தோண்டும்போது, சுமார் 10 அடி ஆழத்தில் ஒரு அம்மன் சிலையும், ஒரு குத்துவிளக்கும் இருப்பதை பணியில் இருந்தவர்கள் பார்த்தனர். இதுகுறித்து அறிந்த திருப்புவனம் தாசில்தார் கண்ணன் அங்கு சென்று 4 அடி உயரமுள்ள அம்மன் சிலையையும், 3 அடி உயரம் உள்ள குத்துவிளக்கையும் மீட்டு தொல்லியல் துறைக்கு தகவல் கொடுத்தார். இவை வைகை ஆற்றில் வந்த பெரும் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு புதைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. சிலையும், விளக்கும் தாசில்தார் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.