பெண்களிடம் நகை, பணத்தை பறித்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்

Update:2023-06-05 22:06 IST


முகநூல் மூலம் பழகி திருப்பூரில் குழந்தையுடன் பெண்ணை அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

குழந்தையுடன் பெண் மாயம்

திருப்பூர் மாஸ்கோ நகரைச் சேர்ந்த ஒரு மளிகைக்கடைக்காரர், தனது 26 வயது மனைவி, ஒரு வயது குழந்தையை காண வில்லை என்று கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் அந்த பெண்ணின் செல்போன் சிக்னலை வைத்து துப்பு துலக்கினார்கள். இந்த நிலையில் அந்த பெண் நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளத்தில் தனது முகநூல் நண்பருடன் இருப்பது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அங்கு சென்ற தனிப்படையினர் ஒரு வீட்டில் இருந்த பெண் மற்றும் அவரது குழந்தையை மீட்டனர். அந்த பெண்ணுடன் இருந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில், அவர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே காந்திநகரை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 32) என்பது தெரியவந்தது. பின்னர் குழந்தையுடன் பெண்ணை மீட்டு திருப்பூரில் உள்ள கணவரிடம் ஒப்படைத்தனர்.

வீடு எடுத்து தங்கினர்

போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

ராமச்சந்திரன் ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். தனது முகநூல் பக்கத்தில் பெண்களுடன் உரையாடல் செய்தபோது, திருப்பூரை சேர்ந்த அந்தப் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு செல்போனில் பேச தொடங்கியுள்ளார்.

தனக்கு திருமணமாகி மனைவி பிரிந்து சென்றுவிட்டார். தனக்கு யாரும் இல்லை. அனாதை என்று தன் மீது இரக்கப்படும் வகையில் ராமச்சந்திரன் பேசியுள்ளார். பின்னர் தனக்கு பணத்தேவை உள்ளது உதவ முடியுமா என்று கேட்டு அந்த பெண்ணிடம் கொஞ்சம், கொஞ்சமாக பணம் பெற்றுள்ளார்.

அதன்பிறகு அதிக பணத்தை ராமச்சந்திரன் கேட்டுள்ளார். கொடுக்க மறுத்ததும், அந்த பெண்ணுடன் பேசி பழகிய விவரத்தை அவரது கணவருக்கு தெரிவிப்பேன் என்று கூறி கொலைமிரட்டல் விடுத்துள்ளார். மேலும் தன்னை ஒருநாள் சந்தித்து விட்டு செல்லுமாறு கூறியுள்ளார். இதை நம்பி அந்த பெண்ணும் ராமச்சந்திரனை தேடி நாகர்கோவில் சென்றுள்ளார். ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் கன்னியாகுமரியில் சுற்றித்திரிந்துள்ளனர். அந்த பெண்ணின் பெயரை ராமச்சந்திரன் தனது கையில் பச்சை குத்தியதுடன், தனது பெயரை அந்த பெண்ணின் கையில் பச்சை குத்த வைத்துள்ளார். அதன்பிறகு ஆசாரிப்பள்ளத்தில் வீடு எடுத்து தங்கியிருந்தபோது போலீசார் பிடித்துள்ளனர்.

கைது

ராமச்சந்திரன் இதுபோல் முகநூல் மூலமாக மேலும் பல பெண்களிடம் பழகியதும் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு முறையும் பெண்களிடம் பேசி அவர்களை தனியாக அழைத்துச்சென்று நகை, பணத்தை பறித்து செலவு செய்துவிட்டு பின்னர் அவர்களை பலாத்காரம் செய்து விட்டு அப்படியே விட்டு விட்டு சென்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து 7 பிரிவின் கீழ் ராமச்சந்திரன் மீது வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்