கொடநாடு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் ஓ,பன்னீர் செல்வம் ஆதரவு அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்

கொடநாடு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஓ,பன்னீர் செல்வம் ஆதரவு அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-02-09 18:45 GMT

சிவகங்கை, 

சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். சிவகங்கையில் மாவட்ட அவைத்தலைவர் பழனியப்பன் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் கே.ஆர். அசோகன் முன்னிலை வகித்தார். சிவகங்கை நகர் செயலாளர் கே.வி.சேகர் வரவேற்று பேசினார். கொள்கை பரப்பு செயலாளர் மருது அழகுராஜ், மாவட்ட துணை செயலாளர் ஜெயச்சந்திரன், பொருளாளர் பழனி, இளைஞரணி செயலாளர் சுந்தரபாண்டியன், மாணவரணி செயலாளர் மாரிமுத்து, இளைஞர் பாசறை செயலாளர் அன்புராஜ், வக்கீல் ராமநாதன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்படாமல் செயல்பட்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில்முருகனை அமைப்பு செயலாளராக நியமனம் செய்ததற்காக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அ.தி.மு.க.வின் ஒற்றுமைக்காக பா.ஜ.க. முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு வரவேற்பு ெதரிவிக்கப்பட்டது. அதே சமயத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் ஒருதலை சார்பு நடவடிக்கைகள் வருந்தத்தக்கதாக உள்ளது. எனவே அதை மாற்றி கொள்ள வேண்டும். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஆட்சிக்கு வந்த 3 மாதத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று அறிவித்த தி.மு.க. அரசு இரண்டு ஆண்டுகளாகியும் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்காமல் காலம் கடத்துவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் தனி கவனம் செலுத்தி குற்றவாளிகளை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி விரைவில் மாவட்ட தலைநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் ஜெயலலிதாவின் பிறந்தநாளில் மாவட்டம் முழுவதும் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கி, கட்சி கொடியேற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்