மோகனூர்:
மோகனூர் அருகே பெண்ணின் வீட்டில் 10 பவுன் நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
10 பவுன் நகை திருட்டு
மோகனூர் அருகே உள்ள மாடகாசம்பட்டி ஊராட்சி மூலக்காடு பகுதியை சேர்ந்தவர் செங்கோடன். இவருடைய மனைவி பாவாயி (வயது 57). செங்கோடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுடைய மகன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இதனால் பாவாயி மூலக்காடு பகுதியில் தனியாக வசித்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 12-ந் தேதி இரவு பாவாயி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் வீட்டில் இருந்து வெளியே ஓடினார். சத்தம் கேட்டு பாவாயி எழுந்து பார்த்தபோது, வீட்டில் வைத்திருந்த தங்க சங்கிலி உள்பட 10 பவுன் நகை திருடப்பட்டிருந்தது.
வாலிபர் கைது
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மோகனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது பாவாயி வீட்டில் திருடியது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா நெடுங்குளம் ஈஸ்வரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜா என்பவரது மகன் சதீஸ் (31) என்பதும், இவரை திருட்டு வழக்கு ஒன்றில் நல்லிபாளையம் போலீசார் கைது செய்து, நாமக்கல் கிளை சிறையில் அடைத்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த சதீசை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது அவர், பாவாயி வீட்டில் நகைகளை திருடியதை ஒப்பு கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், மீண்டும் சிறையில் அடைத்தனர்.