நாமக்கல்லில் 164 பேரிடம் ரூ.7 கோடி மோசடி-பெண் உள்பட 4 பேர் கைது

Update:2023-03-25 00:15 IST

நாமக்கல்:

நாமக்கல்லில் 164 பேரிடம் ரூ.7 கோடி மோசடி செய்த பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தனியார் நிறுவனம்

நாமக்கல்லில் உள்ள துறையூர் சாலையில் நகராட்சி மண்டபம் அருகே கணேசபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். அந்த நிறுவனம் 6 விதமான செல்போன் செயலிகளில் முதலீட்டு திட்டங்கள் இருப்பதாக கூறி வாடிக்கையாளர்களிடம் பணத்தை வசூல் செய்து வந்தது. இதனிடையே குறித்த நேரத்தில் பணத்தை திருப்பி தராமல் மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட குமாரபாளையத்தை சேர்ந்த காளியப்பன் என்பவர் நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் கடந்த 2019-ம் ஆண்டு புகார் அளித்தார். அதில் அந்த தனியார் நிறுவனத்தில் 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 8-ந் தேதி முதல் 2019-ம் ஆண்டு மே மாதம் 27-ந் தேதி வரை ரூ.12 லட்சத்து 57 ஆயிரம் முதலீடு செய்ததாகவும், ரூ.6 லட்சத்து 20 ஆயிரத்தை திரும்ப தராமல் செந்தில்குமார் ஏமாற்றி விட்டதாகவும் கூறியிருந்தார். இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

4 பேர் கைது

போலீசாரின் விசாரணையில் செந்தில்குமார், அழகர், ராமச்சந்திரன், தேவி, மணி, லயா என்கிற சசிகலா, கார்த்திக், கனகா, ஆறுமுகம் மற்றும் பிரபாகரன் உள்பட சிலர் 164 முதலீட்டாளர்களிடம் ரூ.6 கோடியே 93 லட்சத்து 54 ஆயிரத்து 579-ஐ வசூல் செய்து, மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக இருந்த நபர்களை கைது செய்ய சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு (மேற்கு மண்டலம்) தலைமையில் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்தநிலையில் கார்த்திக், கனகா, ஆறுமுகம், பிரபாகரன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தொடர்ந்து தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்