இந்திய குடிமகனின் அடையாளமே ஆதார். ஆதாரே அத்தனைக்கும் ஆதாரம். ஆதார் என்ற ஆதாரம் இல்லை எனில் அடையாளம் இல்லாமல் போவோம். அந்த ஆதாரை பதிவு செய்து 10 ஆண்டுகள் ஆகி இருந்தால் அதை அப்டேட் செய்வது இன்றியமையாதது. வெள்ளகோவிலில் ஆதார் சேவை மையமானது நகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த சேவை மையத்தில் ஆதார் பணிக்காக ஒருவர் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளார். வெள்ளகோவில் பல சிறிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதியாகும். ஆதார் அடையாள அட்டையில் திருத்தம் செய்ய வேண்டும் என்றாலும் வெள்ளகோவில் நகராட்சி அலுவலகத்தில் இயங்கும் சேவை மையத்தை மட்டுமே அணுக வேண்டிய நிலை உள்ளது. தற்போது ஒருவர் மட்டுமே பணிபுரிவதன் காரணத்தினால் நாள் ஒன்றுக்கு 40 முதல் 50 வரை நபர்களுக்கு மட்டுமே ஆதார் தொடர்பான சேவைகளை வழங்க முடிகிறது.
ஆதார் முதல் கட்ட பதிவின்போது பதிவு செய்யப்பட்ட தகவல்கள் சரியாக இல்லாத காரணத்தினால் தற்போது ஆதாரில் அலைபேசி எண் பாலினம், வயது, பெயர் திருத்தங்கள் மேற்கொள்ள பள்ளி மாணவர்கள் உள்பட பெரியோர்கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள்வரை அனைவரும் ஆதார் சேவை மையத்தை நாடி வருகின்றனர். ஆதாரில் புதிய பதிவுகளை காட்டிலும் திருத்தங்கள் மேற்கொள்ளவே அதிக பேர் வருவதாக தெரிவித்தனர்.
இருப்பிட முகவரி
திருப்பூர் மாவட்டத்தை தேர்ந்தெடுத்து ஆதார் பதிவு செய்யப்பட்டு 10 வருடங்களுக்கு மேல் ஆன நபர்கள் உடனடியாக தங்கள் முகவரியை மீண்டும் உறுதிப்பபடுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கை வெளியிட்டதால் திருத்தங்களுக்காக வரும் பொதுமக்கள் முதல் கட்டமாக தங்கள் இருப்பிட முகவரியினை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்படுகிறது. இருப்பிட முகவரிக்கான சரியான ஆவணத்தை பதிவேற்றம் செய்யும் பட்சத்தில் 7 முதல் 10 நாட்கள் வரை ஆதார் நிறுவனம் எடுத்துக் கொள்கின்றது. அதன் பிறகே மக்கள் தங்கள் ஆதார் தொடர்பான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. மேலும் அந்த திருத்தங்கள் ஆதார் நிறுவனத்தால் உறுதி செய்யப்பட 10 முதல் 15 நாட்கள் வரை ஆகிறது. இதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் திருத்தங்களை மேற்கொள்வதற்காக வரும் பொதுமக்கள் இருப்பிட முகவரியை உறுதி செய்யும் புதிய சேவையினால் இரண்டு மூன்று முறை ஆதார் மையத்துக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆதார் அட்டையில் முகவரியை பொதுமக்கள் தாங்களாகவே ஆதார் நிறுவனத்தின் இணையதளத்தில் (wwww.uidai.gov.in) உறுதிப்படுத்திக் கொள்ளும் சேவை இருந்தாலும் அதற்கு தனி நபரின் அலைபேசி எண்ணானது இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த அலைபேசி எண்ணை இணைப்பதற்கு ஆதார் சேவை மையத்தை தேடி வர வேண்டிய நிலை உள்ளது. ஒவ்வொரு சேவையை பெறுவதற்கும் அதற்கு உண்டான வரையறுக்கப்பட்ட நாட்கள் ஆதார் நிறுவனம் எடுத்துக் கொள்வதால் தாங்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மிகவும் தாமதமாவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் பணியாளர்கள்
வயதானவர்கள் கைகளில் உள்ள ரேகைகள் அதன் தெளிவு குறைந்து விட்டதன் காரணத்தினால் ரேஷன் கடைகளில் பொருள் வாங்கும் போது ஆதார் பதிவாகியுள்ள கைரேகையுடன் ஒத்துப் போகாததால் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாத சூழ்நிலை உருவாகின்றது. மூன்று மாதங்களுக்கு மேல் பொருள் வாங்காத பட்சத்தில் ரேஷன் அட்டைகளும் முடக்கப்படுகின்றது. இதனால் வயதானவர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகின்றனர்.
ஆதார் சேவை மையத்தில் போதிய இருக்கை வசதிகள் இல்லாத காரணத்தினால் வயதானவர்கள் உள்பட சேவையை பெறும் வரை வரிசையில் நிற்கின்றனர். ஆதார் பதிவு செய்யப்பட்டு 10 வருடங்களுக்கு மேல் ஆனவர்களுக்கு இருப்பிட முகவரி மீண்டும் உறுதிப்படுத்தும் சேவை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும், போதிய இருக்கை வசதிகள் அமைத்திட வேண்டும் என்றும், இது பள்ளி தொடங்கும் காலம் என்பதால் மாணவர்கள் அதிக அளவில் வரக்கூடும் என்பதனால் கூடுதல் பணியாளர்கள் பணியமர்த்த வேண்டும்.
அரசின் அனைத்து திட்டங்களுக்கு ஆதார் எண் தேவைப்படும் பட்சத்தில் ஆதார் சேவை பெறுவதில் தற்போது இருக்கும் சிக்கல்களை மாவட்ட நிர்வாகம் சரி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அல்லது வார்டு வாரியாக சிறப்பு முகாம்கள் அமைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும், வயதானவர்களுக்கும் இந்த ஆதார் திருத்தங்களை சரி செய்ய வேண்டும் எனபொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.