கோவை
கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு மண்எண்ணெய் ஊற்றி ஆட்டோ டிரைவர் தீக்குளிக்க முயற்சி செய்தார். போலீசார் ஓடிச்சென்று அவரை மீட்டனர்.
தீக்குளிக்க முயற்சி
கோவை மாவட்ட மக்களின் குறைகளே கேட்டு அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் திங்கட்கிழமைதோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது-. இந்த கூட்டத்தில் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி கலெக்டரிடம் கொடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதற்கிடையே மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்துக்கு ஒருவர் வந்தார். பின்னர் அவர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து அதில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
போலீசார் மீட்டனர்
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் ஓடிச்சென்று அவரிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பறித்ததுடன், அவர் மீது தண்ணீரை ஊற்றி மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர், கோவையை அடுத்த வடவள்ளியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது 60) என்பதும், ஆட்டோ ஓட்டி வருவதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ராதாகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம்.க்கு சென்று ரூ.2,500 எடுத்து உள்ளார். ஆனால் பணம் வரவில்லை. அதற்கு பதிலாக அவருடைய வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இது தொடர்பாக வங்கிக்கு சென்று புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காததால் தற்கொலைக்கு முயற்சி செய்தது தெரியவந்தது.
கலெக்டரிடம் மனு
இதையடுத்து அவரை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று தகுந்த அறிவுரை வழங்கினார்கள். பின்னர் அவர் இது தொடர்பாக கலெக்டரை சந்தித்து மனு கொடுத்துவிட்டு சென்றார். கலெக்டர் அலுவலகம் முன்பு ஆட்டோ டிரைவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.