இலங்கை சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்க வேண்டும்: ராமதாஸ்

இலங்கைக்கு உதவி செய்வது நம்முடைய தார்மீக கடமை என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.;

Update:2025-12-25 12:46 IST

சென்னை,

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 22-ஆம் தேதி 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி அனுமதிச்சீட்டு பெற்று மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றன. நள்ளிரவில் இந்திய கடல் எல்லை அருகே நடுக்கடலில் 60-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மன்னார் கடல் பகுதியில் இருந்து சுற்றுக்காவல் வந்த இலங்கை கடற்படையினர் அந்த மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடித்துள்ளனர்.

மேலும் மீனவர்களின் சில படகுகளை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்ததுடன், விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் அவர்களை மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று, மேல்நடவடிக்கைக்காக மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் தமிழக மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி, வவுனியா சிறையில் அடைத்துள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொடூரமாக தாக்கப்படுவதும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதும், படகுகள் சிதைக்கப்பட்டு பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் மீன்பிடித் தொழிலையே நம்பி இருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரம் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகிறது. இது அவர்களின் குடும்பத்தினரின் அன்றாட வாழ்க்கை மட்டுமல்லாது, பிள்ளைகளின் கல்வியும் பாதிக்கப்படுகிறது.

பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்திய அரசு மறு சீரமைப்புக்கான நிதி உதவிகளையும், பல்வேறு கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொண்டிருக்கிறது. இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு துணையாக நிற்க வேண்டியது இந்தியாவின் கடமை என குறிப்பிட்டு இலங்கைக்கு இந்தியா பல்வேறு உதவிகளையும் செய்து தருகிறது. அண்டை நாடு என்கிற போது அந்நாடு பாதிப்புக்குள்ளாகும் போது, இலங்கைக்கு உதவி செய்வது நம்முடைய தார்மீக கடமை தான். அதேசமயம் நம் நாட்டு மீனவர்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும் இந்திய வெளியுறவுத்துறை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

எனவே, மத்திய அரசு தமிழக மீனவர்கள் விவகாரத்தில் நிரந்தர தீர்வு காணும் பொருட்டு இருநாட்டு மீனவர்களும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இதிலும் அக்கறையுடன் செயல்பட வேண்டும். அதற்கு முதல் கட்டமாக இலங்கை சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்