விஷம் குடித்துவிட்டு பஸ்சில் மருத்துவமனைக்கு சென்ற அண்ணன்-தங்கை

சோளிங்கர் அருகே தந்தை தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் அண்ணன்- தங்கை விஷம் குடித்தனர். அவர்களில் 8-ம் வகுப்பு மாணவன் இறந்தான். தங்கைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2023-10-26 19:07 GMT

குடித்துவிட்டு தகராறு

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த ரெண்டாடி கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 38), கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களது மகன் ராகுல் (13), மகள் தனுஷா (11). ராகுல் ஒழுகூரில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். தனுஷா 6-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

சுதாகருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தினமும் மது குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்வதாக கூறப்படுகிறது. வழக்கம்போல நேற்று முன்தினமும் மதுபோதையில் வீட்டிற்கு வந்த சுதாகர் தகராறு செய்துள்ளார்.

விஷம் குடித்தனர்

தந்தை தினமும் குடித்துவிட்டு தகராறு செய்வதால் மனமுடைந்த ராகுல் வீட்டில் இருந்த எலி மருந்தை குடித்துவிட்டு, தங்கை தனுஷாவிற்கும் கொடுத்துள்ளான். தனுஷாவும் மருந்தை குடித்துள்ளாள். சிறிது நேரத்தில் இருவருக்கும் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டுள்ளது.

அப்போது இவர்களின் தாய் ஜெயலட்சுமி வேலைக்கு சென்றிருந்ததால் அவர்கள் இருவரும் கொடைக்கல் பஸ் நிறுத்தத்திற்கு சென்று அங்கிருந்து பஸ்சில் ஏறி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு டாக்டர்களிடம், இருவரும் விஷம் குடித்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். உடனே அவர்கள் இருவருக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

மாணவன் சாவு

பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராகுல் பரிதாபமாக இறந்தான். தனுஷாவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தை குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் அண்ணன், தங்கை விஷம் குடித்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்