நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அதிகபட்சமாக 39 நாட்கள் வெண்ணெய்காப்பு அலங்காரம்
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு இந்த முறை அதிகபட்சமாக 39 நாட்கள் வெண்ணெய்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. கடைசிநாளான நேற்று திரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.;
வெண்ணெய்காப்பு அலங்காரம்
நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு தினசரி காலையில் வடைமாலை அலங்காரமும், தொடர்ந்து அபிஷேகமும் நடைபெறும். பின்னர் சாமி மலர் அலங்காரம், வெள்ளிக்கவச அலங்காரம், முத்தங்கி அலங்காரம் அல்லது தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி, தை மாதங்களில் மட்டும் இரவு நேரங்களில் சாமிக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்படும். இதற்காக கட்டளைதாரர்களிடம் இருந்து கட்டணமாக ரூ.90,200 வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாள் அலங்காரத்திற்கும் 110 கிலோ எடை கொண்ட வெண்ணெய் சேலம் ஆவின் நிறுவனத்தில் கொள்முதல் செய்யப்படும்.
பொதுவாக குளிர்ச்சியான சீதோஷ்ணநிலை இருந்தால் மட்டுமே இந்த அலங்காரத்தை செய்ய முடியும். எனவே தான் பனிகாலங்களில் மட்டும் இந்த அலங்காரத்தை செய்வார்கள். அலங்காரத்திற்கு முன்பு சிலை முழுவதையும் ஜீரோ டிகிரி நீரை ஊற்றி, அச்சகர்கள் குளிர வைப்பார்கள். அதன்பிறகே பல்வேறு வடிவங்களில் வெண்ணெய் சாத்துபடி செய்யப்பட்டு, அலங்காரம் செய்யப்படும். சாத்துபடி செய்யப்பட்ட வெண்ணெய் கட்டளைதாரர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பொதுமக்கள் என 3 பிரிவாக பிரிக்கப்படும். பொதுமக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் 55 கிலோ வெண்ணெய் கிலோ ரூ.240-க்கு விற்பனை செய்யப்படும்.
கூடுதலாக 1,650 கிலோ வெண்ணெய்
இது குறித்து கோவில் பணியாளர்கள் கூறியதாவது:-
கடந்த முறை டிசம்பர் மாதம் 5-ந் தேதி முதல் பிப்ரவரி மாதம் 13-ந் தேதி வரை 24 நாட்கள் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக 2,640 கிலோ வெண்ணெய் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த முறை கடந்த டிசம்பர் மாதம் 1-ந் தேதி தொடங்கி நேற்று வரை 39 நாட்கள் வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக 4,290 கிலோ வெண்ணெய் ஆவினில் கொள்முதல் செய்து பயன்படுத்தி உள்ளோம். கடந்த முறையை ஒப்பிடும்போது இந்த முறை கூடுதலாக 1,650 கிலோ வெண்ணெய் கூடுதலாக பயன்படுத்தப்பட்டு உள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், இனி இந்த ஆண்டில் இறுதியில், அதாவது டிசம்பர் மாதம் தான் வெண்ணெய்காப்பு அலங்காரம் செய்ய முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நேற்று தைமாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், இந்த சீசனில் கடைசி வெண்ணெய் காப்பு அலங்காரம் என்பதாலும் திரளான பக்தர்கள் திரண்டு வந்து சாமியை தரிசனம் செய்தனர்.