விழுப்புரம் மாவட்டத்தில் 3 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல்
விழுப்புரம் மாவட்டத்தில் 3 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தோ்தல் நடைபெற்றது.;
விக்கிரவாண்டி,
விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் ஏற்கனவே மரக்காணம் ஒன்றியம் மானூர் ஊராட்சி வார்டு எண் 6, முகையூர் ஒன்றியம் முகையூர் ஊராட்சி வார்டு எண் 8, விக்கிரவாண்டி ஒன்றியம் ஒரத்தூர் ஊராட்சி வார்டு எண் 4, விக்கிரவாண்டி ஒன்றியம் வி.பகண்டை ஊராட்சி வார்டு எண் 2, செஞ்சி ஒன்றியம் பொன்னங்குப்பம் ஊராட்சி வார்டு எண் 7, 8, 9, நரசிங்கராயன்பேட்டை ஊராட்சி வார்டு எண் 1 ஆகிய 8 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இதுதவிர, முகையூர் ஒன்றியம் காரணை ஊராட்சி வார்டு எண் 7, விக்கிரவாண்டி ஒன்றியம் முண்டியம்பாக்கம் ஊராட்சி வார்டு எண் 9, மேல்மலையனூர் ஒன்றியம் அண்ணமங்கலம் ஊராட்சி வார்டு எண் 5 ஆகிய 3 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.
வாக்குப்பதிவு
இத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்தது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வாக்களிக்க மாலை 5 மணி முதல் 6 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இத்தேர்தலில் காரணை ஊராட்சி வார்டு எண் 7-க்கான கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் மொத்தமுள்ள 608 வாக்காளர்களில் 455 பேர் வாக்குப்பதிவு செய்தனர். இதன் வாக்குப்பதிவு சதவீதம் 74.83 ஆகும். முண்டியம்பாக்கம் ஊராட்சி வார்டு எண் 9-க்கான கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் மொத்தமுள்ள 413 வாக்காளர்களில் 258 பேர் வாக்குப்பதிவு செய்தனர். இதன் வாக்குப்பதிவு சதவீதம் 62.47 ஆகும். அண்ணமங்கலம் ஊராட்சி வார்டு எண் 5-க்கான கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் மொத்தமுள்ள 336 வாக்காளர்களில் 224 பேர் வாக்குப்பதிவு செய்தனர். இதன் வாக்குப்பதிவு சதவீதம் 66.66 ஆகும்.