நாமக்கல்லில் இணையதளம் உள்பட தனியார் நிறுவனங்களின் சில சேவைகள் கேபிள் இணைப்பு மூலமே வழங்கப்படுகின்றன. அந்த கேபிள்களை முறையாக எடுத்துச்செல்லாததால், இங்கும், அங்கும் தொங்கிக்கொண்டிருக்கும் நிலையை நகரில் பல இடங்களில் பார்க்க முடிகிறது.
பெரும்பாலான தெருக்களில் உள்ள தெரு விளக்கு கம்பங்களை ஆக்கிரமித்துத்தான் தனியார் கேபிள்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இது தனியார் நிறுவனங்களின் கேபிள்களுக்கு ஏதோ உள்ளாட்சி அமைப்புகளே வசதி செய்து கொடுத்ததுபோல இருப்பதாக பலருக்கு ஆதங்கத்தை தருகிறது.
ஆபத்தை ஏற்படுத்தும்
இதை சாதாரணமாக கூறிவிட முடியாது. பல சமயங்களில் இந்த ஒயர்கள் ஆபத்தையும் ஏற்படுத்துகின்றன. சாலைகளில் தொங்கியபடி கிடக்கும் ஒயர்கள் வாகனங்களில் சிக்கும்போது வாகன ஓட்டிகளுக்கும், அந்த வழியாக கடந்து செல்பவர்களுக்கும் அபாயத்தை உண்டாக்குகின்றன. சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தான விபத்துகளையும் கூட ஏற்படுத்திவிடுகின்றன.
தொங்கிக்கிடக்கும் ஒயர்களை முறையாக கவனித்து அகற்றுவது கேபிள்களை கொண்டு செல்லும் தனியார் நிறுவனங்களின் பொறுப்பு. ஆனால் அந்த நிறுவனங்கள் அதை சரிவர செய்வது கிடையாது.
கம்பங்களை நட்டு கேபிள்களை கொண்டு செல்லாமல், மரங்களில் தொங்கவிட்டும், வீடுகளின் மீதும் அனுமதி இல்லாமல் எடுத்து செல்கின்றனர். இதில் எத்தனை கேபிள்கள் உரிய அனுமதி பெற்று கொண்டு செல்லப்படுகின்றன என்பதும் புரியாத புதிர்.
பல இடங்களில் தனியார் கேபிள்கள் அறுந்து விழுந்து, கேட்பாரற்று வெகுநாட்களாக கிடக்கும் நிலையையும் காணமுடிகிறது. இதையெல்லாம் சீர்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மின் ஊழியர்களுக்கு சிரமம்
ஜேடர்பாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சுந்தரம்:-
கேபிள் டி.வி. இணைப்பு வீடுகளுக்கு கொடுக்கப்படும் போது சாலையை கடந்து கேபிள் டி.வி. ஒயர்கள் தொங்குவதால் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றன. மேலும் கேபிள் டி.வி. ஒயர்களை மின் கம்பத்தில் கட்டுவதால் மின் ஊழியர்கள் மின் கம்பங்களில் ஏறி வேலை செய்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
கேபிள் டி.வி. ஒயர்கள் ஆங்காங்கே கீழே தொங்கி கொண்டிருப்பதாலும், வீடுகளின் மீது அனுமதியின்றி கேபிள் டி.வி. ஒயர்களை கொண்டு செல்வதாலும் வீட்டின் உரிமையாளர்களும், பொதுமக்களும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே கேபிள் டி.வி. ஒயர்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் போது பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும்.
தடைவிதிக்க வேண்டும்
நாமக்கல்லை சேர்ந்த மோகன் கூறியதாவது:-
நாமக்கல் நகரின் பல இடங்களில் கேபிள் ஒயர்களுக்காகத்தான் தெருவிளக்கு கம்பங்கள் இருக்கிறதோ? என்று எண்ணும் அளவுக்கு, தனியார் நிறுவனங்களின் ஒயர்கள் ஆக்கிரமித்து இருக்கின்றன. ஏதாவது ஒரு கம்பு நடப்பட்டிருந்தால் கூட உடனடியாக அதில் கேபிள் ஒயர்களை சுற்றி சென்று விடுகிறார்கள்.
இதனால் இடியாப்ப சிக்கல்கள் போன்று ஒயர்கள் பின்னிப்பிணைந்து காட்சி அளிக்கின்றன. எனவே, ஆங்காங்கே அலங்கோலமாக காட்சி அளிக்கும் கேபிள்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். மின்கம்பத்தில் கேபிள் ஒயர்களை கட்டுவதற்கு தடைவிதிக்க வேண்டும். பெரும்பாலான வீட்டின் மொட்டை மாடிகளில் கேபிள் ஒயர்கள் தாறுமாறாக கொண்டு செல்லப்படுகின்றன. மொட்டை மாடியில் ஓடி விளையாடும் சிறுவர், சிறுமிகள் இதில் சிக்கி காயம் அடையும் சூழ்நிலை இருந்து வருகிறது. இவ்வாறு செல்லும் கேபிள் ஒயர்களையும் ஒழுங்குபடுத்த வேண்டும்.
பூமிக்கு அடியில்..
பொட்டிரெட்டிப்பட்டியை சேர்ந்த செந்தில்குமார்:-
சில இடங்களில் கேபிள் ஒயர்கள் எந்த பயன்பாட்டுக்காக எடுத்து செல்லப்படுகின்றன என்பதே புரியவில்லை. அரசு இதற்கான அனுமதியை வழங்கி இருக்கிறதா? என்பதும் தெரியவில்லை. அப்படி அனுமதி வழங்கப்பட்டு இருந்தால், வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் இந்த கேபிள் ஒயர்களை பாதுகாப்பாக கொண்டு செல்லவும், அனுமதி பெறாமல் இருந்தால் உடனடியாக அவற்றை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேபிள் ஒயர்களை பூமிக்கு அடியில் பள்ளம் தோண்டி பிளாஸ்டிக் குழாய்கள் மூலம் கொண்டு சென்றால் யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்காது.
அறிவுறுத்த வேண்டும்
கந்தம்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவி பூர்விகா:-
இணையதளம் உள்பட சில வசதிகளை வழங்குவதற்காக இந்த கேபிள் ஒயர்கள் கொண்டு செல்லப்பட்டாலும், பாதுகாப்பாக அமைக்கப்படாமல் இருக்கின்றன. வீடுகளுக்கு முன்பு அலங்கோலமாகவும் காட்சி அளிக்கின்றன. பிரதான சாலைகளில் மலர் மாலைகளின் தோரணங்கள் போன்று அங்குமிங்குமாக ஒயர்கள் தொங்குகின்றன.
இதுதவிர சாலைகளில் குறுக்கும் மறுக்குமாக செல்லும் ஒயர்களால் வாகன ஓட்டிகள் ஆபத்தில் சிக்கும் நிலை இருக்கிறது. இதனை உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனித்து ஒழுங்குபடுத்துவதோடு, சரியான முறையில் ஒயர்களை கொண்டு செல்ல தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.