செல்போன் பயன்படுத்தக்கூடாது: படிக்கும் வயதில் மாணவர்கள் புத்தகத்தோடு பயணிக்க வேண்டும் கலெக்டர் அருண்தம்புராஜ் அறிவுரை
செல்போன் பயன்படுத்தக்கூடாது. படிக்கும் வயதில் மாணவர்கள் புத்தகத்தோடு பயணிக்க வேண்டும் என்று கலெக்டர் அருண்தம்புராஜ் அறிவுரை வழங்கினார்.
இந்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் கடலூர் டவுன்ஹாலில் 4 நாட்கள் டிஜிட்டல் புகைப்பட கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சிக்கு பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பக கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி கவுன்சிலர்கள் அருள்பாபு, சங்கீதா, சுபாஷினி, பார்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்காட்சியை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் திறந்து வைத்து, பார்வையிட்டார். தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து கலெக்டர் தலைமையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
விழாவில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:-
புத்தகத்தோடு பயணிக்க வேண்டும்
இங்கு மாணவ-மாணவிகள் அதிகம் பேர் வந்து இருக்கிறீர்கள். மாணவர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாக கூடாது. மது, சிகரெட், குட்கா போன்ற பழக்கத்திற்கு ஆளானால் படிக்கும் கடமையில் இருந்து தவறி விடுவீர்கள். சினிமாவில் சில காட்சியை பார்த்து விட்டு, ஹீரோ என்று நினைக்கக்கூடாது. சினிமா வாழ்க்கை வேறு, நிஜ வாழ்க்கை என்பது வேறு.
செல்போன் பயன்படுத்தக்கூடாது. டி.வி.யும் அதிகம் பார்க்கக்கூடாது. படிக்கும் வயதில் மாணவர்கள் புத்தகத்தோடு பயணிக்க வேண்டும். படிக்கும் வயதில் உங்களுக்கு புத்தகம் மட்டுமே தேவை. பாலியல் தொல்லைகளில் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாரையும் தொட்டு பேசக்கூடாது. படிக்கும் காலத்தில் மோட்டார் சைக்கிள் தேவையில்லை. தைரியமாக வளர வேண்டும். தோல்வியை தாங்கிக்கொண்டு வெற்றியோடு பயணிக்க வேண்டும். தற்கொலை என்பது கீழ்த்தரமான செயல். சுய நலத்தோடு இருக்கக்கூடாது. பிறரிடம் அன்பு, பரிவு காட்ட வேண்டும். எண்ணம் சரியாக இருந்தால் வெற்றி உங்களை தேடி வரும்.
இவ்வாறு கலெக்டர் அருண்தம்புராஜ் பேசினார்.
முன்னதாக மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து பெண்களுக்கான கருத்தரங்கு நடந்தது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) ஜெயக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனி, மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) கோமதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பழனி மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் கள விளம்பர உதவி அலுவலர் வீரமணி நன்றி கூறினார்.