அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு சான்றிதழ்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் சான்றிதழ்கள் வழங்கினார்.;
அண்ணாமலைநகர்,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புல சுரங்கவியல் துறையில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முப்பரிமாணத்தில் டிஜிட்டல் உருமாற்ற புரட்சி என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தகுதி இருக்கும். உலகத்தில் தகுதியற்றவர் என்று யாரும் இல்லை. மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும், அவரிடமும் ஏதேனும் ஒரு தகுதி இருக்கும். மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டும்தான் வளர முடியும். கிடைக்கின்ற வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்தி முன்னேற வேண்டும். எந்த வேலையானாலும் அதனை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தான் வாழ்வில் வெற்றி பெற முடியும் என்றார். முன்னதாக சுரங்கவியல் துறை பேராசிரியர் சி.ஜி.சரவணன் வரவேற்றார். நிகழ்ச்சியில் பயிற்சியாளர் பிரதாப், இணை பேராசிரியர்கள் பாலமுருகன், வினோத்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பேராசிரியர் மணிகண்டன் நன்றி கூறினார்.