பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

நாட்டறம்பள்ளி அருகே சுடுகாடு இடத்தில் தனிநபர் பொக்லைன் எந்திரம் மூலம் சுத்தம் செய்ததால் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் ஈடுபட்டனர்.

Update: 2023-04-15 16:54 GMT

நாட்டறம்பள்ளி அருகே சுடுகாடு இடத்தில் தனிநபர் பொக்லைன் எந்திரம் மூலம் சுத்தம் செய்ததால் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் ஈடுபட்டனர்.

கோர்ட்டில் வழக்கு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் கொண்டகினந்தப்பள்ளி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட குண்டுகொல்லை பகுதியில் சுமார் 75 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்கள் டோல்கேட் கொத்தூர் செல்லும் சாலையில் குண்டுகொல்லை பகுதியில் சாலையோரத்தில் சுமார் 100 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு இடத்தில் சுடுகாடு பயன்படுத்தி வந்தனர்.

கடந்த 2006-ம் ஆண்டு தனிநபர் ஒருவர் அந்த இடத்திற்கு பட்டா வாங்கி உள்ளார். தற்போது இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பட்டா பெற்றவர் பொக்லைன் எந்திரம் மூலம் சுடுகாடு இடத்தை சுத்தம் செய்து கொண்டு இருந்தார்.

சாலை மறியல்

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி பொதுமக்கள் வழக்கு நிலுவையில் உள்ள போது ஏன் சுத்தம் செய்கிறாய் என கேட்டனர். ஆனால் அவர் தொடர்ந்து சுத்தம் செய்து கொண்டு இருந்தார். இதனால் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் தாசில்தார் குமார் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்