சவரனுக்கு ரூ.98 ஆயிரமாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சமாக நேற்று ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது.;
சென்னை,
கடந்த சில மாதங்களாக சீரான இடைவெளியில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தங்கம் விலை அவ்வப்போது தொட்டு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறது. இதனால் தங்கத்தின் விலையில் நிலையற்றத்தன்மை காணப்பட்டது.
தொடர்ந்து உச்சத்துக்கு சென்று கொண்டிருப்பதால் தங்கம் ஏழை-எளிய மக்களுக்கு எட்டாத கனியாகவே மாறிவிட்டது. குறுகிய காலத்தில் தங்களது சேமிப்பை அதிகரிக்கும் எண்ணத்தில் சிலர் வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியும் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கி இருக்கிறார்கள்.
கடந்த 9-ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.12 ஆயிரத்துக்கும், சவரன் ரூ.96 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. அதன்பிறகும் படிப்படியாக தங்கம் விலை ஏறுமுகம் கண்டு வருகிறது. அதன்பின்னர் கடந்த13-ந்தேதி ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 370-க்கும், சவரன் ரூ.98 ஆயிரத்து 960-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால் அதே விலை நீடித்தது.
இதற்கிடையே நேற்று காலை ரூ.90 அதிகரித்து கிராம் ரூ.12 ஆயிரத்து 460-க்கும், சவரன் ரூ.720 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.99 ஆயிரத்து 680-க்கும் விற்கப்பட்டது.
நல்ல வேளையாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை எட்டவில்லை என்று நினைத்தவர்களுக்கு சில மணி நேரங்களிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மதியத்துக்கு பின்னர் தங்கத்தின் விலை 2-வது தடவையாக மீண்டும் உயர்ந்தது.
அதாவது மேலும் ரூ.55 அதிகரித்து கிராம் ரூ.12 ஆயிரத்து 515-க்கும், சவரனுக்கு ரூ.440 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் கிராமுக்கு ரூ.145-ம், சவரனுக்கு ரூ.1,160-ம் உயர்ந்தது. தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்திருப்பது இல்லத்தரசிகள் இடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
தங்கம் விலையை போன்றே வெள்ளி விலையும் அதிகரித்துக்கொண்டே வந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் வெள்ளி ரூ.210-க்கும், கிலோ ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனையானது. நேற்று ரூ.5 அதிகரித்து கிராம் ரூ.215-க்கும், ரூ.5 ஆயிரம் அதிகரித்து கிலோ ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
ஜி.எஸ்.டி., செய்கூலி உள்ளிட்டவற்றை சேர்த்தால் தங்கம் நகையாக உருவெடுக்கும்போது இன்னும் கூடுதல் தொகையை செலவிடவேண்டியது இருக்கும். தற்போதைய சூழலில் கைகளில் இருக்கும் தங்கத்தை பாதுகாத்து வைத்தாலே லட்சாதிபதியாக தொடரலாம் என்பதே பெரும்பாலான நடுத்தர மக்களின் எண்ணமாக இருக்கிறது.
தங்கம் விலை
இந்நிலையில் தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.165-ம், சவரனுக்கு ரூ.1,320-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,350-க்கும், சவரன் ரூ.98,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் இன்று சரிவை சந்தித்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4-ம், கிலோவுக்கு ரூ.4 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.211-க்கும். ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 11 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒரே ஆண்டில் ரூ.43 ஆயிரம் உயர்வு
கடந்த ஆண்டு (2024) மார்ச் மாதம் 28-ந்தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனையானது. இதுவே அந்த ஆண்டின் கடைசி நாளான (அதாவது டிசம்பர் மாதம் 31-ந்தேதி) சவரன் ரூ.56 ஆயிரத்து 880-க்கு விற்பனையானது. அதில் இருந்து கணக்கிடும்போது ஒரே ஆண்டில் ரூ.43 ஆயிரத்துக்கு மேல் உயர்ந்து ரூ.1 லட்சத்தை கடந்திருப்பது நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
16.12.2025- ஒரு சவரன் ரூ.98,800
15.12.2025- ஒரு சவரன் ரூ.1,00,120
14.12.2025- ஒரு சவரன் ரூ.98,960
13.12.2025- ஒரு சவரன் ரூ.98,960
12.12.2025- ஒரு சவரன் ரூ.98,960
11.12.2025- ஒரு சவரன் ரூ.96,400
10.12.2025- ஒரு சவரன் ரூ.96,240