ஈரோட்டில் விஜய் பிரசாரம்: உறுதி மொழி பிரமாண பத்திரத்தை காவல்துறையிடம் வழங்கிய தவெகவினர்
விஜய் பிரசார கூட்டம் நடைபெறும் இடம் விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடமாகும்.;
சென்னை,
த.வெ.க. தலைவர் விஜய் மாவட்டம் தோறும் மக்கள் சந்திப்பு என்கிற பெயரில் பொதுக்கூட்டங்கள் நடத்தி பொதுமக்கள் மத்தியில் பேசி வருகிறார். அதன்படி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சரளையில் உள்ள சுங்கச்சாவடி அருகே த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேசுகிறார்.
கூட்டம் நடைபெறும் இடம் விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடமாகும். அங்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு கியூஆர் கோடுடன் அனுமதி அளிக்கப்பட உள்ளது. கூட்டம் நடத்த காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
இந்த நிலையில், ஈரோட்டில் விஜய் பிரசாரத்திற்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்து அதற்கான உறுதி மொழி பிரமாண பத்திரத்தை காவல்துறையிடம் தவெகவினர் வழங்கியுள்ளனர். விதிமுறை மீறல் ஏற்பட்டால் பொறுப்பேற்கக்கூடிய அமைப்பாளர்களின் பெயரும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக அவ்வப்போது காவல் துறையினர் தெரிவிக்கும் அறிவுரைகள், விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விஜய் பிரசாரம் செய்யும் பகுதியில் கட்டாயம் மேற்கூரை அமைக்க வேண்டும். விஜய் வரும் நேரம், புறப்படும் நேரம், எந்த வழியில் வருகிறார் என்பது குறித்து முன்பே தெரிவிக்க வேண்டும். பட்டாசு, ஆலைகள் மற்றும் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு வர அனுமதியில்லை என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. நிபந்தனைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.