பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிப்பதில் தாமதம் செய்ததால் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே சிறுவந்தாட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றி வரும் செவிலியர்கள் சிலர் பணி நேரத்தில் சீருடை அணியாதவாறு பணியாற்றியதாக கூறப்படுகிறது. இதை அங்கிருந்த டாக்டர் ஒருவர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது.
இதனிடையே அந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
பொதுமக்கள் மறியல்
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், 50-க்கும் மேற்பட்டோர் நேற்று பகல் 12.15 மணியளவில் சிறுவந்தாடு பஸ் நிறுத்தம் அருகில் திரண்டு வந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சிறுவந்தாடு- மடுகரை கிராம சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் தாசில்தார் வேல்முருகன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்ததன்பேரில் பொதுமக்கள் அனைவரும் பகல் 12.45 மணியளவில் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.