முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு

கே.வி.குப்பம் தாலுகாவில் நடந்த முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-06-10 12:28 GMT

கே.வி.குப்பம்

வேலூருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவதையொட்டி கே.வி.குப்பம் தாலுகாவில் லத்தேரி, கே.வி.குப்பம் சந்தைமேடு ஆகிய பகுதிகளில் 8-ந்தேதி சிறப்பு மக்கள் குறைகேட்பு முகாம்கள் நடந்தன. முகாம்களில் வேலூர் மாவட்ட கலெக்டர் பெ.குமாரவேல்பாண்டியன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமில் பல்வேறு துறைகளை சேர்ந்த நலத்திட்ட உதவிகள் பெற பொதுமக்களிடம் இருந்து 2,133 மனுக்கள் பெறப்பட்டன.

இந்தநிலையில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கே.வி.குப்பம் தாலுகாவில் நடந்த ஆய்வுக் கூடத்தில் பங்கேற்றார். கூட்டத்தில் குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்ஜெயன், தாசில்தார் து.சரண்யா, வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், மண்டல துணைத் தாசில்தார்கள் கி.பலராமன், த.தனலட்சுமி, வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்த கலெக்டர், மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி பயனாளிகளுக்கு விரைவில் நலத்திட்ட உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்