மாணவர்களின் எதிர்காலத்திற்கு நல்ல வழிகாட்டி-கலெக்டர் மதுசூதன்ரெட்டி பேச்சு
நான் முதல்வன் திட்டம் என்பது மாணவர்களின் எதிர்கால திட்டத்திற்கு நல்ல வழிகாட்டி திட்டமாகும் என கலெக்டர் மதுசூதன்ரெட்டி பேசினார்.;
காரைக்குடி
நான் முதல்வன் திட்டம் என்பது மாணவர்களின் எதிர்கால திட்டத்திற்கு நல்ல வழிகாட்டி திட்டமாகும் என கலெக்டர் மதுசூதன்ரெட்டி பேசினார்.
நான் முதல்வன் திட்டம்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நான் முதல்வன் திட்டம் தொடர்பாக கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்களுக்காக நடைபெற்று வரும் பயிற்சி கருத்தரங்கில் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளின் நலன் கருதி அனைத்து வழிகாட்டு முறைகளையும் எளிதில் அறிந்து பயனடையும் வகையில் நான் முதல்வன் என்ற திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
பள்ளியில் படிக்கும் மாணவர்கள் உயர்கல்வியில் என்ன படிக்கலாம் என்பது குறித்து போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் இத்திட்டத்தை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு அனுபவ ரீதியில் இணையதளம் மூலம் கற்றல் திறன்களும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
தொழில் திறன்
இத்திட்டத்தின் கீழ் புதிய தொழில்நுட்பங்களுக்கு தேவையான திறன்களை பெறுவதற்கு அரசின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே இத்திட்டம் மாணவர்களுக்கு வழிகாட்டி திட்டமாக அமைந்துள்ளது. மேலும் இந்த திட்டத்தின் இயங்குதளம் கல்லூரி மாணவர்களுக்கு படிப்புகள் மற்றும் தொழில் சார்ந்த திறன் சலுகைகள் தொடர்புடைய தகவல்களை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
இதன் மூலம் மாணவர்கள் ஆர்வமுள்ள துறையை தேர்ந்தெடுத்து தொழில் நுட்ப நிறுவனங்களில் வழங்கப்படும் பயிற்சியை பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பயிற்சி
திட்டத்தை விரிவுப்படுத்தும் நோக்கத்தில் கல்லூரி பேராசிரியர்களுக்கான கருத்தரங்கு நடத்த அரசால் அறிவுறுத்தப்பட்டு அதன்படி சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் 46 கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்களுக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகள் தொடர்பாகவும், அதில் மேம்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பங்கள் குறித்தும் திறன்மிக்க அகாடமி மூலம் 12 நாட்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இந்த பயிற்சியின் மூலம் பேராசிரியர்கள் மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் நவீன யுக்திகளை எடுத்துரைத்து அவர்களை பயனடைய செய்ய வேண்டும். எனவே அரசின் இத்திட்டத்திற்கு அனைவரின் பங்களிப்பும் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் ராஜ்மோகன், மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர் கர்ணன், அகாடமி பயிற்சி இயக்குனர்கள் ராம்குமார், ராமேந்திராபாபு, கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.