கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தின் புதிய இயக்குநராக ஸ்ரீகுமார் பிள்ளை பதவியேற்பு
ஸ்ரீகுமார் பிள்ளைக்கு 30 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின்(IGCAR) இயக்குநராக பதவி வகித்து வந்த சி.ஜி.கர்ஹாத்கர் 31-ந்தேதி(நேற்று) ஓய்வு பெற்றார். இதையடுத்து அந்த மையத்தின் புதிய இயக்குநராக ஸ்ரீகுமார் பிள்ளை இன்று பதவியேற்றுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த தலைமைத்துவ மாற்றம், கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தின் கவனத்தை இந்தியாவின் அணுசக்தி இலக்குகளுடன் இணைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் வேதியியல் பொறியியலில் பி.டெக் பட்டம் பெற்ற பிள்ளை, 1990-ம் ஆண்டு மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) சேர்ந்தார். அங்கு பல்வேறு பதவிகளில் 35 ஆண்டுகள் பணியாற்றினார். டிராம்பேயில் உள்ள புளூட்டோனியம் ஆலையில் ஷிப்ட் சார்ஜ் பொறியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, மூத்த செயல்முறை பொறியாளர் மற்றும் மேற்பார்வையாளராக உயர்ந்தார்.
செலவழித்த எரிபொருள் மறுசுழற்சி, கதிரியக்க கழிவு மேலாண்மை, எரிபொருள் சுழற்சி செயல்பாடுகள், திட்ட மேலாண்மை, கொள்முதல், பாதுகாப்பு மதிப்பீடுகள் மற்றும் ஒழுங்குமுறை இணக்கம் ஆகியவற்றில் ஸ்ரீகுமார் பிள்ளைக்கு 30 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.