புளியஞ்சோலை அய்யாற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
புளியஞ்சோலை அய்யாற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார்.;
கும்பகோணத்தை அடுத்துள்ள பாபுராஜபுரத்தை சேர்ந்தவர் சர்புதீன். இவரது மனைவி அனார்பேகம். இந்த தம்பதியின் மகன் மாலிக் (வயது 19). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் கல்லூரி மாணவர்கள் திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே புளியஞ்சோலைக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் துறையூர் கோவிந்தாபுரத்தில் உள்ள நண்பர் வீட்டில் தங்கி இருந்தனர். இந்த நிலையில் மாலிக் தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக மோட்டார் சைக்கிளில் மீண்டும் புளியஞ்சோலைக்கு நண்பர்களுடன் வந்தார். அங்கு நண்பர்கள் அய்யாற்றில் குளித்தனர். மாலிக்கிற்கு நீச்சல் தெரியாததால் கரையில் அமர்ந்து இருந்தார். இந்த நிலையில் நண்பர்கள் குளிப்பதை பார்த்து அவரும் ஆற்றுக்குள் இறங்கி உள்ளார். இதில் தண்ணீருக்குள் மூழ்கிய மாலிக்கை நண்பர்கள் மீட்டு உப்பிலியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். டாக்டர்கள் சோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இது குறித்து உப்பிலியபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த நாளில் கல்லூரி மாணவர் இறந்த சம்பவம் நண்பர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.