கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து இந்து எழுச்சி முன்னணியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம்
கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து தேனி, சின்னமனூரில் இந்து முன்னணியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;
பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவு தலைவரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார். இந்த கைது சம்பவத்தை கண்டித்து இந்து முன்னணி சார்பில் தேனி பழைய பஸ் நிலையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக அந்த அமைப்பின் மாவட்ட பொதுச்செயலாளர் முருகன் தலைமையில், மாவட்ட செயலாளர்கள் உமையராஜன், கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் அங்கு வந்தனர்.
அந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இருப்பினும் தடையை மீறி அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் உள்பட 20 பேரை தேனி போலீசார் கைது செய்தனர். அவர்கள் தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதேபோல் சின்னமனூரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதையடுத்து அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் செய்ததாக 30 பேரை போலீசார் கைது செய்தனர்.