ஆயுதம் வைத்திருந்தவர்களை மடக்கி பிடித்து கைது செய்த போலீசாருக்கு தூத்துக்குடி எஸ்.பி. பாராட்டு
கூட்டாம்புளி பாலம் அருகில் புதுக்கோட்டை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.;
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூட்டாம்புளி பாலம் அருகில் கடந்த 13.12.2025 அன்று மாலை புதுக்கோட்டை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கணபதி, தமிழ்நாடு சிறப்பு காவல்படை காவலர்கள் மாரியப்பன் மற்றும் அருள்மணி பிரபாகரன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த ஒரு காரை நிறுத்தும்போது, காரை நிறுத்தாமல் சென்றவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.
அதில் தூத்துக்குடி சிவத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த ராமர் மகன் கார்த்திக் (வயது 30), சாயர்புரம் பகுதியைச் சேர்ந்தவர்களான பெரியசாமி மகன் முத்துசெல்வம்(20), திருமணி மகன் ரமேஷ் அரவிந்த்(21), செந்தில்முருகன் மகன் லத்தீஷ்(20), ஜார்ஜ் மகன் பால்ராஜ்(20), சுந்தர்மணி மகன் ரிஸோன் வேதமணி(21) ஆகியோர் என்பதும் காரில் அரிவாள் மற்றும் கத்தி ஆகியவற்றை மறைத்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்சொன்ன நபர்களை கைது செய்து அரிவாள் மற்றும் கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அதே போன்று கடந்த 12.12.2025 அன்று மாலை புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரலட்சி ரோடு பகுதியில் வைத்து விளாத்திகுளம் காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் புதூர் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் ஜனார்தனன், காவலர்கள் பிச்சைக்கனி, முனியசாமி ஆகியோர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த மினி சரக்கு வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் அவர் வரலட்சுமி வடக்குநத்தம் பகுதியைச் சேர்ந்த குழந்தைசெல்வம் மகன் சக்கரபாண்டி(33) என்பதும் சுமார் 11 கிலோ 700 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மேற்சொன்ன சரக்கு வாகனத்தில் வைத்திருந்ததும் தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து புதூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்சொன்ன நபரை கைது செய்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேற்சொன்ன 2 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாகனத்தணிக்கையின் போது துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்து கைது செய்து அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுத்தும், புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தும் சிறப்பாக பணிபுரிந்த மேற்சொன்ன 7 காவல் துறையினரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் நேற்று நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.