50 வயது கள்ளக்காதலிக்காக ஜோதிடரை தீர்த்துக்கட்டிய 24 வயது வாலிபர்

50 வயது கள்ளக்காதலிக்காக ஜோதிடரை தீர்த்துக்கட்டிய 24 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர், போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2023-04-11 18:45 GMT

சேந்தமங்கலம்

ஜோதிடர் கொலை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 60). ஜோதிடர். இவருடைய மனைவி பேபி (50). இவர்களுக்கு நிரேஷ் குமார் (34), சிமல் (28) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். குடும்ப தகராறில் மனைவியை பிரிந்து சுந்தர்ராஜன் அதே பகுதியில் வேறு ஒரு வீட்டில் வசித்து வந்தார்.

நேற்றுமுன்தினம் சுந்தர்ராஜன், அவர் வசித்த வீட்டில் குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கைது

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்த சுந்தர்ராஜனுக்கும், அதே பகுதியை சேர்ந்த 50 வயது பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.

இந்த விவகாரத்தில் கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். அதன்படி சுந்தர்ராஜனை கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த தறிப்பட்டறை உரிமையாளர் கார்த்தி (24) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

வாக்குமூலம்

அவரிடம் நடத்திய விசாரணையில் போலீசாரிடம், கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

என்னுடைய தறிப்பட்டறைக்கு வேலைக்கு வந்த 50 வயது பெண்ணுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. முதலில் சாதாரணமாக தொடங்கிய எங்களது பழக்கம் நாளடைவில் நெருக்கத்தை ஏற்படுத்தியது. இருவரும் தனிமையில் ரகசியமாக சந்தித்து வந்தோம்.

எங்களது கள்ளக்காதல் விவகாரம் ஜோதிடருக்கு தெரிய வந்தது. உடனே ஜோதிடர், அந்த பெண்ணுடனான தொடர்பை கைவிடும்படி என்னிடம் கூறினார். ஆனால் 50 வயது பெண்ணுடனான ரகசிய உறவை என்னால் கைவிட முடியவில்லை.

தீர்த்துக்கட்டினேன்

எனவே நான் முடியாது என்று கூறியதுடன், சுந்தர்ராஜனை அந்த பெண்ணை விட்டு விலகும்படி கூறினேன். அதற்கு அவரும் மறுப்பு தெரிவித்தார். எனவே என்னுடைய ஆசை கள்ளக்காதலிக்காக சுந்தர்ராஜனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். அன்று சுந்தர்ராஜன் என்னிடம் தகராறில் ஈடுபட்ட போது, நான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை குத்தி தீர்த்துக் கட்டினேன்.

இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் கார்த்தி கூறியுள்ளார்.

சுந்தர்ராஜன் கொலைக்கும், அந்த பெண்ணுக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே அந்த பெண்ணிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்