போக்குவரத்து விதிமீறல்- ஆம்னி பஸ் பறிமுதல்

பழனியில் விதியை மீறி இயக்கப்பட்ட ஆம்னி பஸ் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-10-20 00:30 GMT

பழனி வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயகவுரி, மோட்டார் வாகன ஆய்வாளர் ஸ்ரீதரன் ஆகியோர் பழனிக்கு வரும் ஆம்னி பஸ்களை நேற்று ஆய்வு செய்தனர். அப்போது பஸ் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என கேட்டறிந்தனர்.

அப்போது சென்னையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த ஆம்னி பஸ்சை மறித்து ஆவணங்களை ஆய்வு செய்தபோது, அனுமதி சீட்டின் காலம் முடிந்து இருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போக்குவரத்து விதியை மீறி இயக்கப்பட்டதாக அந்த பஸ்சை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பஸ்சில் இருந்த பயணிகள், வேறு பஸ்சில் பொள்ளாச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் அந்த பஸ், வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ஆயுத பூஜை, விஜயதசமி தொடர் விடுமுறை என்பதால் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வருகிற 25-ந்தேதி வரை ஆய்வு மேற்கொள்ளப்படும். கடந்த 2 நாட்களாக நடந்த ஆய்வின்போது, 'சீட் பெல்ட்' அணியாமல் ஓட்டுதல், அதிக பாரம் ஏற்றி பயணித்தல், ஏர்ஹாரன் பொருத்துதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறியதாக 18 ஆம்னி பஸ்களுக்கு ரூ.21 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்