ரூ.28 கோடியில் 1,400 பண்ணை குட்டை அமைக்கும் பணி

திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.28 கோடியில் 1,400 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணியை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

Update: 2023-07-01 18:37 GMT

1,400 பண்ணை குட்டைகள்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,400 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணியின் தொடக்க விழா கந்திலி ஒன்றியம் சின்னாரம்பட்டி ஊராட்சியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, அ.செ.வில்வநாதன், ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பண்ணை குட்டை அமைக்கும் பணியை தொடங்கி வைத்து பேசினார்.

அவர் பேசியதாவது:-

ரூ.28 கோடி

விவசாயிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்ற காரணத்தினால் தான் விவசாயிகளுக்கு தனியாக நிதி அறிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிதி அறிக்கையில் நீர்நிலைகளை பாதுகாப்பது, பண்ணை குட்டைகள் அமைப்பது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,400 பண்ணை குட்டைகள் வெட்டுவது என்று முடிவு செய்யப்பட்டு இன்று பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

1,400 பண்ணை குட்டை என்பது 208 ஊராட்சிகளில், 700 சமுதாய பண்ணை குட்டையாகவும், ஏனைய 700 தனி நபர் பண்ணை குட்டையாகவும் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கின்றது. ஒரு பண்ணை குட்டைக்கு ரூ.2 லட்சம் என்ற வீதம் 1,400 பண்ணை குட்டைகளுக்கு ரூ.28 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் என்பது முழுக்க முழுக்க விவசாயத்தையே நம்பி இருக்கின்ற மாவட்டம்.

மழை பெய்கின்ற பொழுது நீரை தேய்க்கி வைப்பது தான் இந்த பண்ணை குட்டை அமைப்பதன் நோக்கம்.

இவ்வாறு அவர் பேசினார்.

புறவழிச்சாலை

அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறுகின்ற கழிவுநீரை சுத்திகரிப்பது குறித்து திட்டங்கள் தீட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருப்பத்தூர் மாவட்ட மருத்துவமனை புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் நகரத்தில் அதிகமாக நெரிசல் இருக்கின்ற காரணத்தினால் புறவழிச் சாலை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர். சூரியகுமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பழனி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி, ஒன்றியக்குழு தலைவர்கள் திருமதி திருமுருகன், சத்யாசதீஷ்குமார், வேளாண் உற்பத்தியாளர் விற்பனை கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.ராஜேந்திரன், கந்திலி ஆத்மா தலைவர் முருகேசன், நகர மன்ற தலைவர் சங்கீதாவெங்கடேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விநாயகம், நேரு, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்