பெரியார் பல்கலைக்கழக தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி: தமிழ் பேரரசு கட்சி நிறுவனர் கவுதமன் கண்டனம்

பெரியார் பல்கலைக்கழக தேர்வில் கேட்கப்பட்ட சர்ச்சைக்குரிய கேள்விக்கு தமிழ் பேரரசு கட்சி நிறுவனர் கவுதமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-15 17:24 GMT

விருத்தாசலம்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், தமிழ் பேரரசு கட்சி நிறுவனரும், பொதுச் செயலாளருமான கவுதமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திட்டக்குடி பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த மாணவியை, 4 மாணவர்கள் கஞ்சா அடித்து விட்டு சீரழித்து சிதைத்து விட்டனர். மாணவியை மிரட்டிய மேலும் 2 பேர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்த சம்பவத்தை ஆட்சியாளர்கள் யாரும் கண்டுகொள்ளாத நிலை உள்ளது. போராட்டம் நடத்தினால் தான் நடவடிக்கை எடுப்பீர்களா?.

பொதுவாக ஒரு பெண்ணுக்கு இதுபோன்ற கொடூரம் நிகழும் போது அவர் எந்த சமுகத்தை சேர்ந்தவர் என்று பார்த்து பேசும் கூட்டம் தான் இன்று இருக்கிறது. எல்லா வீட்டு பெண்களையும், தங்களது வீட்டு பிள்ளைகளாக பார்க்கிற நிலை வந்தால் தான் இந்த மண்ணில் நம் வீட்டுப் பிள்ளைகள் எல்லாம் பாதுகாப்பாக இருக்க முடியும்.

சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் சாதி குறித்த சர்ச்சைக்குரிய கேள்வி ஒன்று கேட்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கதாகும். இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?. உயர்கல்வி துறை அமைச்சர், பல்கலைக்கழக துணை வேந்தர் ஆகியோர் என்ன செய்கிறார்கள். இந்த சர்ச்சைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மண்ணில் உயர்ந்த சாதியினர், தாழ்ந்த சாதியினர் என்று எவருமே இல்லை. தமிழ் குடியில் பிறந்தவர்கள் அனைவரும் ஒரு தாய் குடிமக்கள் தான்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்