'சைபர் குற்றங்கள் அதிகரிப்பதற்கு பொதுமக்களின் பேராசையே காரணம்'

சைபர் குற்றங்கள் அதிகரிப்பதற்கு பொதுமக்களின் பேராசையே காரணம் என முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு கூறினார்.

Update: 2023-10-06 18:45 GMT

தேவகோட்டை,அக்.7-

தமிழ் கனவு நிகழ்ச்சி

தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் தமிழக அரசின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:-

தமிழக முதல்வரின் கனவு திட்டம் நான் முதல்வன் திட்டம். கல்வியை மாணவர்கள் சாதாரணமாக நினைக்க வேண்டாம், நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க ஒரு கோடி வரை கடன் உதவி வழங்கப்படும், கல்லூரி மாணவர்களாகிய நீங்கள் நாள்தோறும் திறனை வளர்ந்து கொள்ள வேண்டும், கல்வி மிகப்பெரிய ஆயுதம். உங்களுடைய எதிர்காலத்தை நீங்கள் தான் உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். அதைத் தொடர்ந்து கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்களை சைலேந்திரபாபு பரிசளித்தார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

பேராசையே காரணம்

அதன்பின்னர் நிருபர்களிடம் சைலேந்திரபாபு கூறியதாவது:-

பல இடங்களில் சைபர் குற்றத்தையே தொழிலாக கற்று வைத்துள்ளனர். வடமாநிலங்களில் சைபர் குற்றத்தையே ஒரு ஊரே செய்கிறது. ஆதார் கார்டு, வங்கி தகவல் மூலம் தகவலை திருடி பணத்தைக் கொள்ளையடிக்கின்றனர். சைபர் குற்றங்கள் மூலம் ஒரு ஆண்டுக்கு சராசரியாக ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் ஏமாறுகின்றனர். சைபர் குற்றங்கள் அதிகரிக்க பொதுமக்களின் பேராசையே காரணம்.

சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பல்வேறு விதமான பேராசைகளை பொதுமக்களிடையே தூண்டி விடுகின்றனர். இதனால் பொதுமக்கள் பேராசையில் பணத்தை இழக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் மோகன சந்திரன், போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்டாலின், கோட்டாட்சியர் பால்துரை, கல்லூரி செயலர் செபாஸ்டியன், முதல்வர் ஜான் வசந்தகுமார் மற்றும் பேராசிரியர்கள், மாவட்ட அளவில் பல்வேறு கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்