பள்ளிபாளையத்தில் ரெயில் மோதி மாற்றுத்திறனாளி வாலிபர் பலி

Update:2023-03-24 00:15 IST

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையத்தில் ரெயில் மோதியதில் மாற்றுத்திறனாளி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

மாற்றுத்திறனாளி வாலிபர்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ். கொங்கு நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. விசைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி மாதம்மாள். இந்த தம்பதிக்கு குமரேசன் (வயது 22) என்ற மகன் இருந்தார். இவர் வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி வாலிபர் ஆவார்.

இந்தநிலையில் குமரேசன் நேற்று முன்தினம் மாலை காவேரி ஆர்.எஸ். ரெயில்வே ஜங்சன் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

ரெயில் மோதி பலி

அப்போது அந்த பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட குமரேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் குமரேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரெயிலில் அடிபட்டு மாற்றுத்திறனாளி வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்