சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம் அருகே விவசாய நிலத்தில் வாலிபர் பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாலிபர்
உத்திரகிடிகாவல் ஊராட்சி கவுண்டானூரை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் பிரபாகரன் (வயது 26). தொழிலாளி. திருமணமாகாத இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். மேலும் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக தெரிகிறது. இதனால் அவரை பெற்றோர் கண்டித்தனர்.
இதனிடையெ கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பிரபாகரன் திடீரென மாயமானார். அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
மதுபோதையில் சாவு
இந்தநிலையில் சேந்தமங்கலம் அருகே உள்ள காளப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த மோகன் என்பவரது விவசாய நிலத்தில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினர். விசாரணையில் பிணமாக கிடந்த வாலிபர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாயமான பிரபாகரன் என்பது தெரியவந்தது. மேலும் அவர் மது குடித்து கொண்டு அந்த பகுதியில் சுற்றித்திரிந்ததும், அளவுக்கதிகமான மதுபோதையில் இறந்ததும் தெரியவந்தது. போலீசார் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.