சாலை வசதி கோரி தர்ணா போராட்டம்

சாலை வசதி கோரி தர்ணா போராட்டம் நடைபெற்றது.;

Update:2022-07-20 01:09 IST

துறையூர், ஜூலை.20-

துறையூரை அடுத்த பச்சமலை கோம்பை ஊராட்சிக்குட்பட்ட, மலைக்கிராமங்களான தாளூர், மருதை, செப்புளிச்சாம்பட்டி, போந்தை, மேலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த 3 மாதங்களாக 100 நாள் வேலை முறையாக தரப்படவில்லை எனவும், செம்புளிச்சாம்பட்டி முதல் ஏரிக்காடு வரை சுமார் 6 கி.மீ தூரம் சாலை குண்டும், குழியுமாக உள்ளது என்றும், இதன் காரணமாக பஸ்கள் நிறுத்தப்பட்டு விட்டன. மேலும் கிராமங்களில் கழிவறை வசதி கூட இல்லை. இது தொடர்பாக பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க தலைவர் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமாரிடம் கொடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்