பஞ்சாயத்து தலைவியை செயல்பட விடாமல் செயலாளர் தடுத்தாரா?

பஞ்சாயத்து தலைவியை செயல்பட விடாமல் செயலாளர் தடுத்தாரா என்பது குறித்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.;

Update:2022-12-20 00:52 IST


சிவகாசி யூனியன் ஆனையூர் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுடன் வந்து, பஞ்சாயத்து தலைவி முத்துமாரி, விருதுநகர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- ஆனையூர் முதல் நிலை பஞ்சாயத்து துணைத்தலைவரான நான் கடந்த ஜூலை மாதம் முதல் மாவட்ட நிர்வாகத்தால் தலைவியாக நியமிக்கப்பட்டேன். ஆனால் அன்றைய தேதி முதல் நான் பஞ்சாயத்து தலைவியாக செயல்பட முடியாத அளவிற்கு பஞ்சாயத்து செயலர் நாகராஜன் செயல்பட்டு வருகிறார். அவர் பஞ்சாயத்து பணி மற்றும் அலுவல் குறித்து என்னிடம் தகவல் தெரிவிப்பதில்லை. தன்னிச்சையாக அஜண்டா தயார் செய்தும், போலி பில்கள் தயாரித்தும் பினாமிகள் பெயரில் பஞ்சாயத்து நிதியை முறைகேடு செய்து என்னை மிரட்டி கையெழுத்து வாங்குகிறார். நான் தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறேன். நான் பெண் என்பதாலும், எளிய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதாலும், என்னை அடிமை போல் கையெழுத்து வாங்குவதற்கு மட்டும் பயன்படுத்துகிறார். பஞ்சாயத்து சம்பந்தமாக எந்த ஒரு நிகழ்வுக்கும் அழைப்பதில்லை. வார்டு உறுப்பினர்களின் கருத்துக்களையும் கேட்பதில்லை. பல வழிகளில் ஊராட்சி நிதியை செலவு செய்து வருகிறார். இவர் தொடர்ந்து பஞ்சாயத்தில் பணியாற்றும் பட்சத்தில் அவர் செய்யும் முறைகேடுகளுக்கு நானும் காரணமாகி விடுவேனோ என அச்சப்படுகிறேன். கடந்த சுதந்திர தினத்தன்று நான் தேசியக் கொடி ஏற்றிய போது ஒரு படம் கூட எடுக்க விடாமல் செய்து அவமரியாதை செய்தார். எனவே பஞ்சாயத்து செயலர் நாகராஜன் மீது நடவடிக்கை மேற்கொண்டு பெண்ணுரிமையை பாதுகாக்கும் படியும், பஞ்சாயத்தில் பொதுமக்களின் நிதி பொதுமக்களை சென்றடைவதற்கும் வழிவகை செய்ய வேண்டுகிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்