நிதி நிறுவனத்திற்குள் அத்துமீறி நுழைந்து தங்க மோதிரம், செல்போன்கள் பறிப்பு: 2 பேர் கைது
குலவணிகர்புரத்தைச் சேர்ந்த ஒருவர், தனது நிதி நிறுவனத்தில் பைக் வாங்க நிதியுதவி பெற்று, அதை திருப்பி செலுத்தாத ஒருவரின் பைக்கை பறிமுதல் செய்து வைத்துள்ளார்.;
திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குலவணிகர்புரத்தைச் சேர்ந்த சரத்குமார் (வயது 32) என்பவர் ஒரு நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் கடந்த 2024-ம் ஆண்டு இருசக்கர வாகனம் வாங்குவதற்காக ஆறுமுகசுந்தரம் என்பவர் நிதி உதவி பெற்று, இதுவரை செலுத்த வேண்டிய தொகையை திருப்பி செலுத்தாத காரணத்தினால் சரத்குமார் அந்த பைக்கை பறிமுதல் செய்து வைத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகசுந்தரத்தின் நண்பரான தச்சநல்லூர் சிதம்பரநகரை சேர்ந்த மணிகண்டன்(25) மற்றும் அவரது தந்தை கணேசன்(60) ஆகியோர் சரத்குமாரின் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அவதூறு வார்த்தைகளால் பேசி, அச்சுறுத்தி, 2.5 சவரன் தங்க மோதிரம் மற்றும் 5 செல்போன்களை பறித்து சென்றதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்சொன்ன 2 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.