பல்லவர்கால மூத்ததேவி சிற்பம் கண்டெடுப்பு

விழுப்புரம் அருகே பல்லவர்கால மூத்ததேவி சிற்பம் கண்டெடுக்கப்பட்டது

Update: 2023-01-10 18:45 GMT

விழுப்புரம்

மூத்ததேவி சிற்பம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தி.எடையார் கிராமத்தில் வீரன் கோவில் எதிரே திருக்கோவிலூர் சாலையின் ஓரத்தில் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் விஸ்வநாதன் நிலத்தை சீர் செய்தபோது புடைப்புச்சிற்பம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

அவர் கூறிய தகவலின்படி விழுப்புரம் வரலாற்றுத்துறை பேராசிரியரான ரமேஷ் மற்றும் ரங்கநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேரடியாக சென்று களஆய்வு செய்தனர். அப்போது ஜேஷ்டாதேவி என்னும் மூத்ததேவி சிற்பத்தை கண்டறிந்தனர். இதுபற்றி அவர்கள் கூறியதாவது:-

பல்லவர் காலத்தை சேர்ந்தது

இச்சிற்பம் 100 சென்டிமீட்டர் உயரமும், 76 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட மென்கூட்டு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. மூத்ததேவி, 2 கால்களையும் பக்கவாட்டில் அகற்றிய நிலையில் இரு கரங்களை தொங்கவிட்டவாறு வலதுகரத்தில் மலரை கீழ் நோக்கி பிடித்த நிலையில், இடதுகரத்தில் தொங்கவிட்டவாறும் உள்ளன. தலையை கரண்டு மகுடம் அணி செய்கின்றன. காதில் தடித்த குண்டலமும், கழுத்தில் தடித்த அணிகலன்களும் காணப்படுகிறது.

மூத்ததேவியின் வலதுபுறம் மகள் மாந்தினியும், இடதுபுறம் மகன் மாந்தன் எருமை தலையுடன் காணப்படுகிறான். வலப்புறத்தில் கீழ் அவளது வாகனம் கழுதையும், அதன் கீழ் சக்கரமும் போன்ற அமைப்பும், வலதுபுறம் காக்கை கொடியும், இடதுபுறம் கீழ் ஒரு ஆண் உருவமும் நின்ற நிலையில் உள்ளது. இதன் கீழ் கலசம் காணப்படுகிறது. மூத்ததேவியின் இடை முதல் பாதம் வரை நீண்ட ஆடை முடிச்சுடன் தொங்குகிறது.

மேலும் கிராமிய கலை பாணியில் அமைந்துள்ள இதன் காலம் கி.பி. 8-ம் நூற்றாண்டு பல்லவர் காலமாகும். தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ள சித்தலிங்கமடம், மாரங்கியூர், திருவெண்ணெய்நல்லூர், தி.எடையார் போன்ற ஊர்கள் மற்றும் சோழ காலத்தில் சிறந்து விளங்கியதை அங்குள்ள கோவில்களும், சிற்பங்களும் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. இதன் மூலம் தி.எடையார் கிராமம் பல்லவர் காலத்தில் சிறந்து விளங்கியதை எடுத்துக்காட்டுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்