சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் மின்கம்பங்கள் சேதம்
ராணிப்பேட்டையில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் மின்கம்பங்கள் சேதம் அடைந்தது.
ராணிப்பேட்டையில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் மின்கம்பங்கள் சேதம் அடைந்தது.
பலத்த மழை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. குறிப்பாக ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜாப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது. மழையுடன் பலத்த காற்றும் வீசியதால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.
மின்கம்பங்கள் சேதம்
சூறைக்காற்று வீசியதில் ராணிப்பேட்டை சந்தை அருகே உள்ள காவலர் குடியிருப்பு மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து மின்சார ஒயர்களின் மீது விழுந்ததால் சில மின்கம்பங்கள் சேதம் அடைந்தன. இதனால் அப்பகுதியில் இரவு முழுவதும் மின்வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இது தொடர்பாக பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் முறிந்த மரக்கிளைகளை அகற்றி மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.