விரைவாக பட்டா வழங்க வேண்டும்
அத்திக்குட்டை பகுதியில் 50 ஆண்டுகளாக வசித்து வரும் பொதுமக்களுக்கு விரைவாக பட்டா வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.;
கோவை
அத்திக்குட்டை பகுதியில் 50 ஆண்டுகளாக வசித்து வரும் பொதுமக்களுக்கு விரைவாக பட்டா வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
குறைதீர்க்கும் கூட்டம்
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தங்களது குறைகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை கலெக்டர் சமீரனை சந்தித்து அளித்தனர். இதையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
குறைதீர்க்கும் கூட்டத்தில், அத்திக்குட்டை பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
காளப்பட்டி அருகே உள்ள அத்திக்குட்டை அண்ணா நகர் பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அரசு ஒதுக்கிய இந்த இடத்துக்கு இதுவரை பட்டா கொடுக்கவில்லை.
கடந்த 1990-ம் ஆண்டு கோவை மாவட்ட கலெக்டரும், கடந்த 2004-ம் ஆண்டு தமிழக கவர்னரும் பட்டா வழங்க உத்தரவிட்டனர். 2010-ம் ஆண்டு உயர்நீதிமன்ற உத்தரவில் அனைத்து தரப்பினரையும் விசாரித்து பட்டா வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால் தற்போது வரை பட்டா வழங்க நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நில அளவை செய்து விரைவாக பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
ேதாட்ட தொழிலாளர்கள்
நீலாம்பூர் கிராம மக்கள் அளித்த மனுவில், நெசவாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கழிவுநீர் மற்றும் கட்டிட கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதை எதிர்த்தால், அரசியல் கட்சி பிரமுகர் மூலம் மிரட்டல் வருகிறது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
வால்பாறை அருகே சின்கோனா டேன்டீயில் 500-க்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறோம். 80 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை பார்த்து வரும் நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் எங்களுக்கு தினசரி சம்பளத்தை 425.40 ரூபாயாக அரசு உயர்த்தி அறிவித்தது. ஆனால் இதுவரை புதிய சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. எனவே உடனடியாக நிலுவையில் உள்ள தொகையையும், சம்பள உயர்வையும் வழங்க வேண்டும்.
கரும்பு வழங்க வேண்டும்
இதேபோன்று எங்களை டேன்டீயை விட்டு வெளியேற கூறி வருகின்றனர். மேலும் வால்பாறை டிவிசன் லாசல் கோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை நீலகிரியில் இயங்கும் மற்ற தோட்டங்களுக்கு பணி மாறுதல் செய்ய உள்ளனர். இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாரதீய ஜனதா கட்சியின் விவசாய அணி மாவட்ட தலைவர் வசந்தசேனன் மற்றும் நிர்வாகிகள் கையில் வெல்லத்துடன் வந்து அளித்த மனுவில், வருகிற பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு வழங்கும் பரிசு தொகுப்பில் கரும்பு, வெல்லம், தேங்காய் ஆகியவற்றை சேர்க்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
திடீரென தர்ணாவில் ஈடுபட்டவரால் பரபரப்பு
கணபதி கட்டபொம்மன் வீதியை சேர்ந்த சிவலிங்கம் என்பவர், கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தார். பின்னர் திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவரிடம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு தர்ணாவை கைவிட்டு கலெக்டரிடம், அவர் மனு அளித்தார். அந்த மனுவில், கணபதி விளாங்குறிச்சி பகுதியில் ஒரு இடத்தை ஒப்பந்தம் மூலம் வாடகைக்கு எடுத்து தொழில் நடத்தி வந்தேன். அங்கு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து பொருட்களை உடைத்து சேதப்படுத்திவிட்டனர். மேலும் சில பொருட்களை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.