இது என் கடைசி அரசியல் யுத்தமாக கூட இருக்கலாம்; தொண்டர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு
சேலத்தில் நாளை மறுதினம் பாமக பொதுக்குழுக்கூட்டம் நடைபெற உள்ளது.;
சேலத்தில் நாளை மறுதினம் (29ம் தேதி) பாமக பொதுக்குழுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி தொண்டர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில்,
சேலத்தில் நடைபெறவுள்ள பாமகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு இன்னும் 24 மணி நேரமே எஞ்சியுள்ளது. இந்தக் கூட்டம் வெறும் நிர்வாக நிகழ்வு அல்ல.
இது உண்மையான பாமகவின் மறுபிறப்பு.
இது குடும்ப சண்டையல்ல , பதவிக்கான போர் அல்ல. நாம் எல்லோரும் சேர்ந்து உழைத்து உருவாக்கிய இயக்கத்தின் ஆன்மாவை காப்பாற்றும் போராட்டம்.
ஒருகாலத்தில் 20 எம்.எல்.ஏ.க்கள் இருந்த பாமக இன்று அங்கீகாரத்தையே இழந்த நிலையில் உள்ளது. இதற்கு காரணம் உழைப்பின்மையும், பொறுப்பற்ற தலைமையும்தான்.
கட்சித் தலைமை குறித்த கோரிக்கைகள் இன்று சட்ட ஆய்வின் கீழ் உள்ளது. அஸ்திவாரத்திலேயே சந்தேகம் எழும்போது, கட்சி எப்படி முன்னேறும். சேலத்தில் கூடும் பொதுக்குழு பாமகவின் புதிய அத்தியாயத்தின் தொடக்கம். சட்டசபை தேர்தலில் 25 தொகுதிகளில் வென்று, ஆட்சியில் பங்கு பெற்று,
இழந்த அங்கீகாரத்தையும், கட்சிச் சின்னத்தையும் மீட்டெடுக்கப் போகும் பயணத்தின் முதல் படி இந்த பொதுக்குழுக்கூட்டமாகும்.
இது என் கடைசி அரசியல் யுத்தமாக கூட இருக்கலாம். ஆனால் என் கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும், இந்த இயக்கத்துக்காகவும், என் மக்களுக்காகவும் போராடுவேன். சேலம் பொதுக்குழுவில் கலந்து கொண்டு, உண்மையோடும், உழைப்போடும், உண்மையான பாமகவோடும் நிற்க ஒவ்வொரு தொண்டரும் முன்வர வேண்டும்
இவ்வாறு தெரிவித்துள்ளார்.