ஊட்டி அருகே, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த அரசு பள்ளி ஊழியர் பலி

ஊட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த அரசு பள்ளி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update:2023-09-22 22:46 IST

ஊட்டி: ஊட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த அரசு பள்ளி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அரசு பள்ளி ஊழியர்

ஊட்டி அருகே முள்ளிக்கொரை பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 31). இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு தான் திருமணம் முடிந்தது. மேலும் 20 நாட்களுக்கு முன்னர் தான் குழந்தை பிறந்தது. இதில் சரவணன், ஊட்டி அருகே லவ்டேல் பகுதியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் அரசு பள்ளியில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் நேற்று சரவணன் மஞ்சக்கொம்பை சந்திப்பு பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் லவ்டேல் பகுதியில் உள்ள தான் பணியாற்றும் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.

போலீசார் விசாரணை

மஞ்சக்கொம்பை சந்திப்பில் இருந்து சிறுதொலைவில் சென்றபோது மோட்டார் சைக்கிள் திடீரென சரவணனின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி சாலையில் உருண்டு விபத்துக்குள்ளானது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் தூக்கி வீசப்பட்ட சரவணன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை, அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக பரிசோதனை செய்த டாக்டர்கள் தெரிவித்தனர். இதன் பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.இதுகுறித்து ஊட்டி மத்திய போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே விபத்து காரணமாக ஊட்டி-மஞ்சூர் சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன்பின்னர் போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்