மாநில கலைத்திருவிழா போட்டிக்கு வால்பாறை அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு

மாநில கலைத்திருவிழா போட்டிக்கு வால்பாறை அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு;

Update:2022-12-26 00:15 IST

வால்பாறை

வால்பாறை பகுதியில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு வால்பாறை ஒன்றிய அளவிலான அனைத்து அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலைத் திருவிழா நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டியில் கலந்து கொண்டனர். இதில் வால்பாறை அருகில் உள்ள வாட்டர் பால்ஸ் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் கோபாலகிருஷ்ணன் பறையடிக்கும் போட்டியிலும், அட்டகட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் நவீன்குமார் குழுவினர் தலைமையில் டிரம்ஸ் அடிக்கும் போட்டியிலும் மாவட்ட அளவில் முதலிடத்தில் வெற்றி பெற்று மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் இருவருக்கும் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் பதக்கம், சான்றிதழ் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்.

இவர்களுடன் சேர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 2 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவ மாணவிகள் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். வால்பாறை பகுதி அரசு பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிக்கு தகுதி பெற்று பிற மாணவ மாணவிகளுக்கு முன் உதாரணமாக அமைந்துள்ளனர் என்றும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்த இரண்டு மாணவர்களையும் மேலும் ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு தொடர்ந்து பயிற்சியும் விளையாட்டு துறை சார்பில் ஊக்கத் தொகையும் வழங்க முன் வரவேண்டும் என்று வால்பாறை ஒன்றிய அளவிலான பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்