கஞ்சா விற்பனையை தடுக்கக்கோரி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கஞ்சா விற்பனை
சேலம் மாநகராட்சி 9-வது வார்டு வாய்க்கால்பட்டறை வால்காடு பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். அப்போது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களிடம் தங்கள் பகுதியில் கஞ்சா விற்பனை ஜோராக நடந்து வருவதாகவும், இதனால் அவ்வழியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பல்வேறு தொந்தரவு ஏற்படுவதாகவும், இதுபற்றி அம்மாப்பேட்டை போலீசில் புகார் செய்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாகவும் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து பொதுமக்களில் சிலரை மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்குள் போலீசார் அழைத்து சென்று அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்க செய்தனர்.
கேலி செய்து தகராறு
இதுகுறித்து மனு கொடுக்க வந்த பெண்கள் கூறுகையில், வாய்க்கால்பட்டறை வால்காடு பகுதியில் கஞ்சா விற்பனை நடக்கிறது. அங்குள்ள திறந்த வெளி நிலத்தில் தினமும் 20-க்கும் மேற்பட்ட ஆண்கள் நின்று கொண்டு கஞ்சா புகைக்கின்றனர். மேலும், அவர்கள் அவ்வழியாக நடந்து செல்லும் பெண்களை கேலி, கிண்டல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
கடந்த வாரம் அந்த பகுதியில் நடந்து சென்ற 14 வயது சிறுமியிடம் சிலர் தகராறு செய்து ஆபாசமாக பேசியுள்ளனர். இதனை தட்டிக்கேட்ட இளைஞர்களை சிலர் தாக்கியுள்ளனர். இரவு நேரத்தில் அங்கு வந்து சிலர் மது அருந்தி செல்கின்றனர்.
கடும் நடவடிக்கை
இதுபற்றி அம்மாப்பேட்டை போலீசில் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கஞ்சா விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு வசிக்கும் பொதுமக்கள் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும், என்றனர். சேலத்தில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்தக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.