தனியார் வங்கிபெண் அதிகாரியிடம் நூதன முறையில் ரூ.19½ லட்சம் மோசடி

கோவை தனியார் வங்கி பெண் அதிகாரியிடம் திருமண இணையதளம் மூலம் பழகி நூதன முறையில் ரூ.19½ லட்சம் மோசடி செய்த மர்ம நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2023-03-23 00:15 IST


கோவை தனியார் வங்கி பெண் அதிகாரியிடம் திருமண இணையதளம் மூலம் பழகி நூதன முறையில் ரூ.19½ லட்சம் மோசடி செய்த மர்ம நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தனியார் வங்கி அதிகாரி

கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த 26 வயது இளம் பெண் தனியார் வங்கியில் மக்கள் தொடர்பு மேலாளராக பணிபுரிகிறார். இந்த நிலையில் இணையதள திருமண தகவல் மையம் மூலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த பெண்ணிற்கு வாலிபர் ஒருவர் அறிமுகமானார். அந்த நபர் தனது பெயர் ஜாபர் இப்ராஹிம் என்றும் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் என்றும் தெரிவித்தார். மேலும் தற்போது அமெரிக்காவில் டாக்டராக பணிபுரிவதாக தெரிவித்தார்.

இதனை உண்மை என்று நம்பிய அந்த பெண், அவருடன் பழகினார். மேலும் செல்போன் மூலம் தினமும் பேசி வந்தனர். இந்த நிலையில் ஜாபர் இப்ராஹிம் தான் ரஷியாவில் ஒரு வேலைக்காக வந்ததாகவும், அங்கு பணி முடிந்து உன்னை சந்திப்பதற்காக இந்தியா வர உள்ளதாகவும் தெரிவித்தார்.

டெல்லி விமான நிலையம்

மேலும் இந்தியா வருவதற்கான விமான டிக்கெட் வாங்க பணம் தேவைப்படுவதாக தெரிவித்தார். இதனை நம்பிய அந்த பெண், அவருக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி உள்ளார். சம்பவத்தன்று ஜாபர் இப்ராஹிம் அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு, தான் டெல்லி விமான நிலையத்திற்கு வந்து விட்டதாகவும், தான் 6.80 லட்சம் அமெரிக்க டாலர் கொண்டு வந்ததால் சுங்க அதிகாரிகள் தன்னை பிடித்து வைத்து இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த அமெரிக்க டாலருக்கு சுங்க கட்டணம் செலுத்த ரூ.19½ லட்சம் பணம் தேவைப்படுவதாக கூறினார். இதனை உண்மை என்று நம்பிய அந்த இளம் பெண் உடனடியாக ஆன்லைன் மூலம் அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பினார்.

விசாரணை

பணத்தை பெற்றுக்கொண்ட இப்ராஹிம் அதன்பின்னர் கோவை வரவில்லை. மேலும் அவர் பயன்படுத்திய செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அருண், சப்-இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இணையதள திருமண தகவல் மையம் மூலம் பழகி கோவை பெண்ணிடம் நூதன முறையில் ரூ.19½ லட்சம் பணம் பறித்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்