அருப்புக்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம்

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அருப்புக்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2022-09-01 19:27 GMT

அருப்புகோட்டை,

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அருப்புக்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.

விநாயகர் சிலை ஊர்வலம்

அருப்புக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்ணணி சார்பில் மணிநகரம், காந்தி மைதானம், புளியம்பட்டி உள்பட 10 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. இந்த சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கண்மாயில் கரைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

பாளையம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் மதுரை ரோடு வழியாக புதிய பஸ் நிலையம் அருகே வந்தது. அப்போது முஸ்லிம் பஜார் உள்ள பகுதியான புதிய பஸ் நிலையத்திலிருந்து ஆழாக்கரிசி விநாயகர் கோவில் வரை மேளம் அடித்துச்செல்ல கூடாது என கூறி மேளம் அடிப்பவர்களை ஒரு வேனில் ஏற்றி சென்றனர்.

வாக்குவாதம்

இதனை கண்டித்து கோஷங்கள் எழுப்பிய படி ஊர்வலத்தை தொடங்கினர். அப்போது ஆழாக்கரிசி கோவில் முன்பாகவே மேளம் அடித்தால்தான் இங்கிருந்து செல்வோம் என கூறி இந்து முன்னணியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை சமாதானம் செய்து ஊர்வலத்தை தொடர நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட இடம் வந்ததும் மேளதாளங்களுடன் மீண்டும் ஊர்வலம் தொடங்கியது. சிவன் கோவில், மெயின் பஜார், அகமுடையார் பஸ் நிலையம், எம்.எஸ். கார்னர் வழியாக சென்று பெரிய கண்மாயில் விநாயகர் சிலைகள் அனைத்தும் கரைக்கப்பட்டன.

பாதுகாப்பு பணி

விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் உள்பட பல்வேறு வகையான வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் தலைமையில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்