வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டிருந்த 30 வாகனங்களின் கண்ணாடி உடைப்பு

அரூரில் வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டிருந்த 30 வாகனங்களின் கண்ணாடிகளை நள்ளிரவில் அடித்து உடைத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-10-25 19:30 GMT

அரூர்:

அரூரில் வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டிருந்த 30 வாகனங்களின் கண்ணாடிகளை நள்ளிரவில் அடித்து உடைத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாகனங்களின் கண்ணாடிகள் உடைப்பு

தர்மபுரி மாவட்டம் அரூரில் உள்ள தில்லை நகர், மேல் பாட்சாப்பேட்டை, கீழ் பாட்சாப்பேட்டை, முருகன் கோவில் தெரு, சுடுகாடு மேடு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் ஆகியவற்றை வீட்டின் முன்பு சாலையோர பகுதியில் நிறுத்தி வைப்பது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், சரக்கு வாகனங்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் என 30 வாகனங்களின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். நேற்று காலை வீடுகளில் இருந்து வெளியே வந்த குடியிருப்பு வாசிகள் வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து அரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்ட வாகனங்களை பார்வையிட்டனர். அப்போது வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் போலீசாரிடம் வலியுறுத்தினார்கள்.

இந்த சம்பவம் நடந்த தெருக்களில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்