கோவில்கள் உள்பட முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு விதித்த தடையை உறுதி செய்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து, கோவையில் உள்ள கோவில்கள் உள்பட முக்கிய இடங்களில் 2-வது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.;
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு விதித்த தடையை உறுதி செய்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து, கோவையில் உள்ள கோவில்கள் உள்பட முக்கிய இடங்களில் 2-வது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
தாக்குதல்
மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு தடை விதித்தது. இதைத்தொடர்ந்து பல்வேறு இடங்களில் செயல்பட்ட அந்த அமைப்பின் அலுவலகங்கள் மூடி சீல் வைக்கப்பட்டன. அப்போது தடை விதிப்பை கண்டித்து கோவையில் பல இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றன. இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் அந்த அமைப்பினர் தடை விதிப்பை எதிர்த்து டெல்லியில் உள்ள சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் (உபா) முறையீடு செய்தனர். இதை விசாரித்த டெல்லி சிறப்பு கோர்ட்டு, மத்திய அரசு விதித்த தடையை உறுதி செய்து உத்தரவிட்டது.
வாகன சோதனை
இந்த உத்தரவை தொடர்ந்து கோவை மாநகரில் ஒப்பணக்கார வீதி, ஆத்துபாலம், டவுன்ஹால் உள்பட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக கோவை கோனியம்மன் கோவில், ஒப்பணக்கார வீதி, உக்கடம், ஆத்துப்பாலம், குனியமுத்தூர், காந்திபுரம் உள்பட பல்வேறு இடங்களில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் துடியலூர், சூலூர், பொள்ளாச்சி, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
போலீஸ் பாதுகாப்பு
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தயா அமைப்பின் மீதான தடையை உறுதி செய்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து கோவை மாநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்ற கோட்டை மேடு சங்கமேஷ்வரர் கோவில் முன்பு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.கோவை வி.கே.கே.மேனன் ரோட்டில் உள்ள பா.ஜனதா அலுவலகத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேட்டுப்பாளையத்தில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.