ஆசனூர் பகுதியில் பலத்த மழை; சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

ஆசனூர் பகுதியில் பலத்த மழை; சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Update: 2023-07-11 22:02 GMT

தாளவாடி

தாளவாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்தது. அவ்வபோது மழை தூறியது. இந்த நிலையில் தாளவாடி, அருள்வாடி, மெட்டல்வாடி, சூசைபுரம், ஓசூர், தலமலை, ஆசனூர், திம்பம், திகினாரை, சிக்கள்ளி, இக்கலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 3 மணி முதல் 4 மணி வரை பலத்த மழை பெய்தது. இதேபோல் வனப்பகுதியிலும் பலத்த மழை பெய்தது. தாளவாடி பகுதியில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து ஓடியதால் சாலையில் பொதுமக்கள் நடக்க முடியாமல் அவதிப்பட்டனர். இந்த நிலையில் ஆசனூரில் இருந்து திம்பம் செல்லும் சாலையில் சீவக்காபள்ளம் அருகே மூங்கில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து அறிந்ததும் வனத்துறை ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதைத்தொடர்ந்து போக்குவரத்து சீரானது. சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் தமிழகம்- கர்நாடக மாநிலம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொடுமுடி, ஊஞ்சலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றுமுன்தினம் பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியத்துக்கு மேல் சில இடங்களில் சாரல் மழை பெய்தது. பின்னர் இரவு 9 மணி அளவில் மீண்டும் சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய, விடிய நிற்காமல் தூறிக்கொண்டே இருந்தது.

இதேபோல் அத்தாணி, கள்ளிப்பட்டி, பங்களாப்புதூர், டி.என்.பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் சாரல் மழை பெய்தது.

Tags:    

மேலும் செய்திகள்